ஈ.வெ.ரா. நினைவு நாள்? ?தந்தை பெரியாரின் கடைசி நாள் – ? – AanthaiReporter.Com

ஈ.வெ.ரா. நினைவு நாள்? ?தந்தை பெரியாரின் கடைசி நாள் – ?

?இந்த பிரபஞ்சத்தில் இப்படி ஒரு மனிதனால் கொஞ்சம் கூட சுயநலமின்றி வாழ முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு மக்கள் நலனுக்காகவும், அனைவரும் ஒன்றாக வாழ வேண்டுமென்று அவர்களிடமிருந்த அறியாமையையும் சாதி வேற்றுமையையும் அகற்ற பாடுபட்ட, நம் தமிழக மக்களால் மறக்க முடியாதவரான 96 வயதான ஈ.வெ.ரா.பெரியார் வேறு வழி இல்லாமல் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டது.

அதாவது திராவிடர் கழகத் தலைவர் பெரியார், குடல் இறக்க (“இரணியா”) நோயினால் அவதிப்பட்டு வந்தார். அதனால், 1973 டிசம்பர் 20ந்தேதி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வேலூருக்கு கொண்டு போகப்பட்டு, சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஞாயிற்றுக்கிழமை அவர் உடல் நிலை கவலைக்கிடமாகியது. தூக்கம் இல்லாததாலும், வலியினாலும் வேதனைப்பட்டார்.

பெரியாருக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து வைத்திய நிபுணர் டாக்டர் ராமச்சந்திரராவ், வேலூருக்கு அனுப்பப்பட்டார். பெரியார் உடல் நிலை பற்றி தகவல் அறிந்ததும், முதல்_அமைச்சர் கருணாநிதி வேலூருக்கு விரைந்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று பெரியாரை பார்த்தார். பெரியார் உடல் நிலை கண்டு கண் கலங்கினார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ப.உ.சண்முகம், ராசாராம், ராமச்சந்திரன் ஆகியோரும் வேலூர் சென்று பெரியாரை பார்த்தார்கள்.

பெரியாரின் மனைவி மணியம்மை, அமைச்சர் ப.உ.சண்முகம், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி ஆகியோர் பெரியார் அருகிலேயே இருந்து கவனித்து வந்தனர். சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர்கள் பட், பாண்டே, ஜான்சன், சென்னையில் இருந்து சென்ற டாக்டர் ராமச்சந்திரராவ் ஆகி யோர் சிகிச்சை அளித்தனர். தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருக்கும் அன்பழகனுக்கு ஈ.வெ.ரா.பெரியார் உடல் நிலை பற்றி தகவல் கிடைத்ததும் வேலூருக்கு டெலிபோன் செய்து, டாக்டர் ஜான்சனுடன் டெலிபோனில் பேசினார். பெரியார் உடல் நிலை பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நல்ல முறையில் சிகிச்சை அளித்து, பெரியார் விரைவில் குணம் அடைய ஆவன செய்யும்படி டாக்டரிடம் கேட்டுக் கொண்டார். ஆனாலும் பெரியார் உடல் நிலை அன்று இரவு மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. நள்ளிரவு 2 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வெ.ரா.பெரியார், 1973 டிசம்பர் 24ந்தேதி காலை 7.30 மணிக்கு மரணம் அடைந்தார். இஅதையடுத்து அவருடைய உடல், கார் (“வேன்”) மூலம் மாலை 4 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பெரியார் உடல் வந்து சேருவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே, ராஜாஜி மண்டபத்தின் முன் பெரும் திரளான மக்கள், கண்களில் கண்ணீர் வடிய துயரத்துடன் கூடி நின்றனர். முதல் அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்தில் காத்திருந்தனர். பெரியார் உடலை வைப்பதற்காக, ராஜாஜி மண்டபத்தின் முன்புறத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையில் ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டு, மேலே வெள்ளை துணி விரிக்கப்பட்டு இருந்தது.

மாலை 4 மணிக்கு, பெரியார் உடல் வைக்கப்பட்ட “வேன்” ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது. பெரியார் உடல், வேனில் இருந்து இறக்கப்பட்ட போது, கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் கண் கலங்கினார்கள். திராவிட கழகத் தொண்டர்கள் கதறி அழுதார்கள். பெரியார் உடல் வந்த வேனில், மணியம்மை இருந்தார். அவர் கதறி அழுதபடி இருந்தார். அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் பெரியார் உடல் வந்த வேனுடன், வேறொரு காரில் வந்தனர். ராஜாஜி மண்டபத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார் உடல் வைக்கப்பட்டது. உடல் மீது, திராவிட கழக கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பெரியார் உடல் மீது முதலில் கருணாநிதி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து, அம்மையார், மாதவன், சாதிக் பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், ஓ.பி.ராமன், அன்பில் தர்மலிங்கம், ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர்.

நடிகர் சிவாஜிகணேசன் மலர் வளையம் வைத்து விட்டு, பெரியார் காலடியில் தலை வைத்து கதறி அழுதார். ப.காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், ப.ராமச்சந்திரன், கருத்திருமன், அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர்., தமிழரசு கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம், இ.கம்யூனிஸ்டு தலைவர் ராமமூர்த்தி, பல்கலைக்கழக துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, தமிழ்நாடு கம்யூனிஸ்டு தலைவர் மணலி கந்தசாமி, மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவர், சென்னை செரீப் கே.எஸ்.நாராயணன், பாராளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மேயர் முத்து, திராவிட கழக பிரமுகர்கள், நடிகர்கள் எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, டி.கே.பகவதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர்.

பெண்கள் கறுப்பு சேலை அணிந்திருந்தனர். பெரியார் உடலைப் பார்த்ததும் பலர் “அய்யா, அய்யா” என்று கதறினர். ராஜாஜி மண்டபத்தின் முன்னால் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நீண்ட கியூ வரிசைகளில் நின்றனர். “கியூ”வின் நீளம் ஒரு மைல் தூரம் இருந்தது. அவர்கள் வரிசையாகச் சென்று, பெரியாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் உடல், ராஜாஜி மண்டபத்தில் உள்ள மேடை மீது வைக்கப்பட்ட போது, திராவிட கழக பொதுச் செயலாளர் வீரமணி மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கிச் சென்று மயக்கம் தெளியச் செய்தனர். பெரியார் மறைவுக்கு பிரதமர் இந்திராகாந்தி அனுதாபம் தெரிவித்தார். இன்றளவும் தமிழகத்தில் சாதிப் பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளாத தலைமுறையை உருவாக்கிய தந்தை பெரியார் எனும் சகாப்தம் முடிவடைந்தது.?

®தகவல் உதவி ; ??‍♀கட்டிங் கண்ணையா?