மேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று! – AanthaiReporter.Com

மேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று!

ஈராக்கைத் தொடர்ந்து ஈரான் நாட்டுடனும் ஒரு ரவுண்டு முட்டி மோதிக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துடியாய்த் துடிக்கிறார். போர்கள் நடந்தால்தான் ஆயுதங்கள் விற்கும். ஆயுத வணிகர்களுக்கு பெரும் பணம் கொட்டும். போரில் வீழ்ந்த நாட்டில் தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சுரண்ட முடியும். இடிந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகளைக் கட்டித் தருவதாகக் கூறி ஏராளமான அளவில் காசு பார்க்க முடியும்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அதிபர் டிரம்ப்பின் ஈரான் விவகார ஆலோசகரான பிரையன் ஹூக் பேசினார்.

சுருக்கமான பேச்சுதான் அது.

‘ஈரான் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வாங்கத் துடிக்கிறது. ஈரானின் நடத்தையும், போக்கும் சரியில்லை. ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணிதிரள வேண்டும்‘ என்றார் ஹூக்.

அவ்வளவுதான்.

மேடியா பெஞ்சமின் என்ற சிறுபெண் திடீரென மேடையேறினார்.

‘மத்தியக் கிழக்கில் இன்னும் ஒரு போரை நீங்கள் விரும்புகிறீர்களா? ஈரானுடனான அணுஒப்பந்தம் தொடர வேண்டும் என்றே உலகம் விரும்புகிறது. அது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா பேச வேண்டும் என்று உலகம் பிரியப்படுகிறது‘ என்று பிலுபிலுவென பேச ஆரம்பித்துவிட்டார் அந்தப் பெண்.

‘அமெரிக்காவின் தோழமை நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் கூட இதைத்தான் விரும்புகின்றன‘ என்று மேடியா பெஞ்சமின் பேசியபோது பயங்கர அதிர்ச்சி.

அவரைப் பேசவிடாமல் காவலர்கள் தடுக்க தடுக்க மேடியா பெஞ்சமின் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

‘ஈரான் மீது நீங்கள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் மக்கள்தான் பாதிக்கப்படப் போகிறார்கள். ஈராக் போரில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாதா? லிபியாவில் என்ன ஆனது? சிரியாவில் மக்களின் துயரம் தொடர்கிறது‘ என்று பேசிக் கொண்டே இருந்தார் அந்த சிறுபெண்.

‘நீங்கள் ஆதரிக்கும் சௌதி அரேபியா என்ன செய்கிறது? யேமன் நாட்டில் குண்டுமழை பொழிந்து மக்களைக் கொல்கிறது‘ என்றும் மேடியா பெஞ்சமின் குற்றம்சாட்டினார்.

காவலர்களின் முரட்டுத்தனமான பிடிக்கு நடுவில், தொடர் தள்ளுமுள்ளுக்கிடையே பேசினார் அந்தப் பெண்.

‘மத்தியக் கிழக்கில் இன்னொரு போர் வேண்டாம்‘ என்று அந்தப் பெண் கூறியபோது, காவலர்கள், ‘மேடம் நீங்கள் எதுவாக இருந்தாலும் வெளியே போய் பேசுங்கள்‘ என்று அவரை தரதரவென இழுத்துச் செல்ல முயன்றார்கள்.

‘போர் வேண்டாம். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்‘ என்று மேடியா பெஞ்சமின் இறுதியாகக் கூறியபோது அவர் வெளியேற்றப்பட்டார்.

‘இவ்வளவு சின்ன பெண் ஓரிரு நிமிடங்களில் உலக அரசியலை ஓர் ஆட்டுஆட்டிவிட்டாரே, அமெரிக்காவை இப்படி அம்பலப்படுத்திவிட்டாரே’ என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

கருத்து சுதந்திரத்துக்குப் பேர் போன அமெரிக்காவில் ஒரு சிறுபெண் அவரது கருத்தைக் கூற வந்ததற்கு இவ்வளவு தடையா என்ற கேள்வியும் பார்வையாளர்களிடம் எழாமல் இல்லை.

நல்ல வேளை. மேடியா பெஞ்சமின் கைது செய்யப்படவில்லை. கைது செய்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும் என்பதால் அவரை அப்படியே விட்டுவிட்டது அமெரிக்க காவல்துறை.

என்ன இருந்தாலும் அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா?

மோஹன ரூபன்