தேர்தலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை!

தேர்தலில் சீர்திருத்தம் உடனடியாக தேவை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பும் கூட அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் இதே காரணத்திற்காக தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. தண்டனைகளும் தள்ளி வைப்புகளும் முறைகேடுகளைத் தடுத்துவிடவில்லை என்பது அனுபவம். தவறுகளுக்கு தண்டனை என்பதை விட தவறுகளை குறைத்திட அல்லது நிகழாமல் தடுக்கிற தேர்தல் முறைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் எழுகிறது. எனவே தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயமாகிறது. திருமங்கலம் பார்முலாவை கடுமையாக விமர்சித்த அதிமுக, திரு வரங்கம் பார்முலாவை செயல்படுத்த தயங்கியதோ வெட்கப்பட்டதோ கிடையாது.

edit apr 12

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?

உலகின் பல நாடுகளில் தற்போது அமலில் இருக்கிற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல வகைகளில் இன்றைய தேர்தல் முறையை விட மிகச் சிறந்தது. முதலாவதாக இந்த முறையில் தனி நபர் தன் பணத்தை தேர்தலில் முதலீடாக கருதும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்; தனிப்பட்ட ஒருவர் வேட்பாளர் என்பதற்கு பதிலாக கட்சிகளின் சின்னங்களே வாக்குப் பெட்டிகளில் இருக்கும் இதனால் மாநிலத்தில் அல்லது நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்பதும் தீர்மானிக்கப்படும். அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ள பட்டியலின் அடிப்படையில் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் யார் யார் மக்கள் பிரதிநிதிகள் என்பது தீர்மானிக்கப்படும். இதனால், ‘‘இந்தக் கட்சி வெற்றி பெறாது; எனவே வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம்’’ என்கிற நிலை முடிவுக்கு வரும்.

இந்த முறையில் ஒவ்வொரு வாக்கும் அதற்குரிய மதிப்பைப் பெறும். இதே போன்று, 40 சதவீத வாக்குகளை பெற்றுவிட்டு அதற்கு பொருத்தமில்லாத கூடுதல் இடங்களை பெற்று 100சதவீத அதிகாரம் செலுத்துகிற முறை முடிவுக்கு கொண்டுவரப்படும். இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் 50 சதவீதம் அல்லது அதற்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியில் இருந்து வந்துள்ளது. இப்போதுள்ள மோடியின் கதையும் அதுதான். சில சமயங்களில் வாக்குகளை குறைவாக பெற்ற கட்சி அதிகமான இடங்களை பெறுவதும்,

அதிகமான வாக்குகளை பெற்ற கட்சி அதற்கேற்ப இடங்களை பெறாமல் போவதும் நடந்திருக்கிறது. விகிதாச்சார தேர்தல் முறை இந்த விசித்திரங்களுக்கு தீர்வாக அமைய முடியும். ஒவ்வொரு கட்சியும் அது எந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அவர்கள் எத்தனை குறைந்த சதவிகிதத்தில் இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநிதிகள் இருப்பார்கள். இதன் மூலம் அனைவருக்குமான குரல்கள் உத்தரவாதப்படுத்தப்படும். இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டிய அவசியமிருக்காது. கட்சித் தாவலுக்கான வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்படும். ஒருவர்இறந்து விட்டாலோஅல்லது கட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டாலோ முறைகேடுகளில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட கட்சியே அவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பட்டியலிலிருந்து நிரப்பிக் கொள்ளமுடியும்.

ஆட்சி கவிழ்ப்போ இடைத்தேர்தல்களோ முறைகேடான தேர்தல் உடன்பாடுகளோ தவிர்க்கப்படும். மிக முக்கியமாக தனி நபர்கள் தங்களுடைய பணத்தை ஒரு தொகுதியில் கொட்டுவதோ அல்லது ஒரு வேட்பாளர் தன்னுடைய சாதியை சார்ந்தவர் என்பதால் வாக்களிப்பதோ இருக்காது.

பப்புயாதவ் போன்றவர்கள் அடியாள் பலத்தின் மூலமாக வெற்றி பெறுவது தடுக்கப்படும். கிரிமினல்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரும். தேர்தல் பிரச்சாரங்களில் தனிநபர் தாக்குதல்களும் துதிபாடுதலும் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. இந்தியா போன்ற நாட்டில் உடனடியாக இந்த முறைக்கு மாறுவது சாத்தியம் இல்லை என்று சிலர் வாதிடக்கூடும். எனவே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதார்த்தமான தீர்வை முன்வைக்கிறது: ‘‘நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் பணத்தால் அரிக்கப்படுவதும், அதிக வாக்கு பெற்ற முதலில் இருப்பவரே வெற்றியாளர் என அறிவிக்கும் தேர்தல் முறையில் உள்ள பிரிவுகளும் தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை உணர்த்துகின்றன. பகுதி அளவிலான பட்டியலோடு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும்.’’ (சிபிஐ(எம்) விசாகப்பட்டினம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் 2.4.3) பாதியளவு மக்கள் பிரதிநிதிகளை வாக்குச்சீட்டு மூலம் தேர்வு செய்வது உட்பட விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை 90க்கும் மேற்பட்ட நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவிலும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட இந்திரஜித் குப்தா ஆணையம் உள்ளிட்ட பல ஆணையங்களும் தேர்தலில் பொதுச் செலவினம் குறித்து வலியுறுத்தியுள்ளன. இந்த வகையில் தேர்தல் எனும் ஜனநாயக நடைமுறையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதை நோக்கி நாம் விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

செலவுகள்:

தற்போதைய முறையில் தனி ஒரு வேட்பாளர் செய்யும் செலவுகளுக்கு மட்டுமே  கட்டுப்பாடு விதிக்கும் நிலை உள்ளது. ஆனால் தேர்தலில் கட்சிகள் செலவு செய்ய எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.செலவுகளைக்கட்டுப்படுத்துவது என்பதன் பொருள், போதுமான நிதி இல்லை என்கிற காரணத்தினால் தேர்தல் களத்தில் மிகக் குறைவாகவே செலவழிக்க வாய்ப்புள்ள எவருக்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாதுஎன்பதே.  ஆனால் நடப்பில், அரசியல்கட்சிகளின் செலவுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால் கட்சியின் செலவுகள் என்பதன் பேரில் தாராளமாகவும் ஏராளமாகவும் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். இது செலவுக் கட்டுப்பாடு எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அதையே கேள்விக்குள்ளாக்குவதாகும். எனவே தேர்தல்களுக்கான செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்றுக் கொள்வதும் அரசியல் கட்சிகளின் செலவுகளுக்கு உச்சவரம்பு விதிப்பதும் மிக அவசியமாகும். தேர்தல் சாதனங்களை பொருளாக அரசு வழங்க வேண்டும்.

இதே போன்று கட்சிகளுக்கு வரும் நன்கொடைகள் மிக முக்கியமானது. 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டால் லஞ்சமும் கறுப்புப் பணமும் குறைந்துவிடும் என்று பிரதமர் கூறிவந்தார். ஆர்.கே.நகரில் விநியோகிக்கப்பட்ட பணம் கறுப்புப் பணம்தான் என்பதும் அது கட்டுப்பட்டு விடவில்லை என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த பணத்திற்கான ஊற்றுக்கண் முறைகேடானதாகும். எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள், கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் நன்கொடை அளிப்பதை தடை செய்ய
வேண்டும்.

தேர்தல் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கட்சிகளுக்கான நன்கொடைகள், நிதித் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.எனவே கட்சிகள் நிதிக்காக, முறை கேடாக சம்பாதிப்போர், அரசின் முடிவுகளில் தங்களுக்கு லாபகரமான முடிவுகளை எதிர்பார்ப்போர் இவர்களைச் சார்ந்து நிற்கின்றன. இதனால் ஆட்சிக்கு வந்த பிறகு, நிதியை அளித்தவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கும் எதிர்க் கட்சியாக இருந்தால் நிதி அளித்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அல்லது தவறு செய்தால் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் வாய்ப்பாகிறது. எனவே பெரும் நிறுவனங்கள் மற்றும் நிறுவன குழுமங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை உறுதியாக தடை செய்ய வேண்டும்.

நிவாரணமும் தீர்வும்:

நிவாரணங்கள் தற்காலிகமானவை. ஆனால் பொதுவாக நிவாரணங்களையே தீர்வுகளாக சித்தரிப்பதும் அதை நம்பிக் கொள்கிற சூழ்நிலையும் தமிழகத்தில் நிலை பெற்றிருக்கிறது. எனவே தான் தேர்தல் சீர்திருத்தம் என்பதும் ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கி செல்வது மிகவும் அவசியமாகும். கடும் தண்டனை, பதவி நீக்கம், சிறை தண்டனை ஆகியவற்றிற்கு ஓரளவுதான் தவறுகளை அல்லது முறைகேடுகளை குறைக்கும் வலு உள்ளது. ஆனால் என்ன முயற்சி செய்தாலும் தவறுகளும் முறைகேடுகளும் செய்ய முடியாத ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம் நிரந்தரத் தீர்வை உருவாக்க முடியும்.

அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் தேர்தல் ரத்துசெய்யப்பட்டதால் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடக்காமல் இல்லை. திருமங்கலம் பார்முலாவை கடுமையாக விமர்சித்த அதிமுக, திருவரங்கம் பார்முலாவை செயல்படுத்த தயங்கியதோ வெட்கப்பட்டதோ கிடையாது. ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக தண்டிக்கப்பட்டதால், இது சிறைக்கு போக வழி வகுக்கும் என்று விஜயபாஸ்கர் பயந்து விடவில்லை.

டி.டி.வி.தினகரன் எல்லோருக்கும் 4000 ரூபாய் கொடுத்தார் என்றால், 1000 ரூபாய் குறைவு என்பதாலேயே ஓ.பன்னீர்செல்வம் அணியினர்கொடுத்த 3000 ரூபாய் தவறற்றது என்று சொல்லிவிட முடியாது. தன்வாக்காளருக்கும் ஆதரவாளருக்கும் 2000 ரூபாய் கொடுத்த திமுகவின் செயலும் நியாயப்படுத்த முடியாதது.  எனவே தான் நேர்மையாக நடந்து கொள்வதை தனிப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளருக்கான சவாலாக விட்டுவிட முடியாது. ஒரு வாக்குக்கு 9000 ரூபாய் என்பது சாதாரண மனிதருக்கு மிகப் பெரிய தொகை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் இதற்கு வாய்ப்பில்லாத ஒரு தேர்தல் முறையை உருவாக்குவதே மிகவும் தேவையானது. அந்த முறை நிவாரணமாக மட்டும் இருந்து விடாமல் தீர்வாகவும் அமைய வேண்டும்.

க. கனகராஜ்

Related Posts

error: Content is protected !!