தேர்தல் என்பது ஜனநாயகத்தைக் காக்கும் ஆபரேஷனாக்கும்! – AanthaiReporter.Com

தேர்தல் என்பது ஜனநாயகத்தைக் காக்கும் ஆபரேஷனாக்கும்!

1967 லிருந்து 1996 வரை நடந்த தேர்தல்களில் பார்வையாளன், வேட்பாளர்களின் முகவர், வேட்பாளர் என்று தேர்தல் களத்தில் இருந்துள்ளேன். 1998 நாடாளுமன்ற தேர்தல் வரை பூத் செலவு என்று வாங்குவதற்கே கிராமத்தில் தயங்குவார்கள். 1989ல் வெறும் 200 ரூபாய் கொடுத்தால் கூட எங்களுக்கு எதற்கு… தேர்தல் அன்று கிராமத்து சார்பில் நாங்களே செலவு செய்கிறோம். பணம் வேண்டாம் என்று மக்கள் மறுத்துவிடுவார்கள். அப்போது சின்ன பந்தல் அமைத்து பூத்திலிருந்து 200, 300 மீட்டர் தள்ளி தேர்தல் பணியை செய்வார்கள். அங்கு வருபவர்களுக்கு தேனீர் வாங்கி தருவதும் உண்டு. விதவிதமாக சுவரொட்டிகளும், டோர் ஸ்லிப்புகளும், பேட்ஜ்களும் அச்சிட்டு தருவது உண்டு.

edit may 2

தேர்தல் நாள் அன்று வாக்காளர்களை வாக்களிக்க அழைத்துச் செல்ல ஊர்திகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதெல்லாம் பல கிராமங்களில் வாக்குச் சாவடிகள் இருப்பதில்லை. அருகாமையில் உள்ள கிராமங்களுக்குத்தான் நடந்து சென்று வாக்களிக்க வேண்டும். கோவில்பட்டி ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 40 கிராமங்களுக்கு வாக்குச் சாவடி பக்கத்தில் உள்ள கிராமத்தில்தான் இருக்கும். குருவிகுளம் ஒன்றியத்தில் 15 கிராமங்களுக்கு வாக்குச் சாவடியே கிடையாது. இவர்களை அழைத்துச் செல்ல 70 வாகனங்களாவது அமர்த்த வேண்டும். அதற்கான செலவும் இருந்தது. அது மட்டுமல்லாமல், வாக்காளர் அடையாள ஸ்லிப் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதி கொடுப்பதும் உண்டு. இவ்வளவு பணிகள் அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு அந்த பணிகள் எல்லாம் கிடையாது. இந்த நிலையிலும் ஒரு பூத்துக்கு முதல் தவணை 10 ஆயிரம். இரண்டாவது தவணை 15 ஆயிரம், மூன்றாவது தவணை 25 ஆயிரம் என்று வாங்கி என்ன செலவுள்ளது என்பது புரியவில்லை.

இது வீணாக மதுக் கடைக்கு சென்று குடித்து உடம்பை கெடுத்துகொள்கின்ற தேர்தல் கால கூத்தாகிவிட்டது. நான் 1989ல் போட்டியிட்ட போது எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை என்ற கிராமத்தில் வேலுச்சாமி என்ற கூலிக்கு வேலை செய்தவர் சிறுக சிறுகச் சேர்த்து எனக்கு நன்கொடையாக 300 ரூபாய் கொடுத்தார். மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். திரும்பவும் அவருடைய துணைவியாரிடம் திருப்பிக் கொடுத்து விட்டேன். சின்னமலைக்குன்று என்ற கிராமத்திலும் அவ்வூர் ஊராட்சித் தலைவர் 2 ரூபாய் புதிய கரன்சி கட்டை என்னிடம் அளித்தார். எதற்கு என்று கேட்டேன். உங்கள் செலவுக்கு வெச்சிக்கிடுங்க என்றார். அதே போல அந்த கிராமத்துக்கு அருகே வங்கார்ப்பட்டியைச் சேர்ந்த எல்லப்ப நாயக்கர் சற்று வசதியானவர். புதிய 100 ரூபாய் நோட்டுகளாக 5 ஆயிரம் ரூபாய் தந்தார். என்னங்க இவ்வளவு பணம் கொடுக்கிறீங்களேன்னு சற்று இழுத்தேன். அவர் கே.எஸ்.ஆர். நீங்கள்ளாம் ஜெயிச்சு வரணும் என்று மனப்பூர்வமாக சொன்னதெல்லாம் ஒரு காலம்.

இன்றைக்கு என்ன? வேட்பாளர் களத்துக்கு சென்றவுடன் பூத் செலவு முதல் தவணை எப்ப வரும் என்று கேட்கின்ற நிலைமை ஆகிவிட்டது. இதற்கு யார் காரணம்? மக்கள் அல்ல; நாம் ஏற்படுத்திக்கொண்ட தவறான அணுகுமுறையும் வாடிக்கையும் ஆகும். இது எதில் போய் முடியும் என்பதை உணராமல் பாம்பு புற்றில் கை வைக்கின்ற கதையாகிவிட்டது. ஆனால் எப்படியும் இதில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் என்றால் அன்றைக்கு திருவிழா போல மக்கள் நினைப்பார்கள். இன்றைக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அரசியலில் திருப்பதியில் பிறந்த ஒரு நடிகை தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு அரசியலை சொல்லி வாக்குகளை கேட்டு வருகிறார். இன்னொரு நடிகை குஜராத்திலிருந்து வந்து தமிழே பேசத் தெரியாமல் பிரச்சாரத்துக்கு வர இருக்கின்றார். இது என்ன அரசியல்? உடம்பில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதைப் போல பொதுவாழ்விலும் நேர்மையான எளிமையான அரசியல் உண்டு. அதைப் போலவே தற்போது இந்த பொதுவாழ்வு நாசமாகி கேடுகெட்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.
இதனால் பாதிக்கப்படுவது நாடும், மக்களும்தான். தேர்தல் ஜனநாயகத்தின் அச்சாணி. இதை நெறிமுறைப்படுத்தினால்தான் குடியாட்சி என்ற ஜனநாயகம் வலுப்பெற்று ஆரோக்கியமாக பயணிக்கும். தேர்தல் என்பது பொழுதுபோக்கல்ல. திரையரங்குகளில் போய் சினிமாவைப் பார்ப்பது போன்றதல்ல. ஆபரேஷன் தியேட்டரில் நோயை நீக்கி உடம்பை காக்கும் ஆபரேஷன் போல தேர்தல் என்பது ஜனநாயகத்தைக் காக்கும் ஆபரேஷன் ஆகும். உடம்பில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை அப்புறப்படுத்துவது போல நல்ல கொலஸ்ட்ரால்களை உடம்பில் காப்பதைப் போல, ஆதிக்க சக்திகளையும் போலிகளையும் விரட்டி நேர்மையாளர்களை தங்களின் பிரதிநிதிகளாக பதவியில் அமர்த்துவதுதான் தேர்தல். விலை போய்விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

இன்றைக்கு இந்தியாவில் தண்ணீருக்கு காசு, ஓட்டுக்கு காசு என்று நடைமுறையில் இருப்பது பெரும் கேடாகும். ஜனநாயகத்தின் கற்பு தேர்தலில்தான் காக்கப்படுகிறது. எனவே தேர்தலினுடைய மாண்பையும், மதிப்பையும், நேர்மையையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். சினிமா, ஜாதி, மதம் என்பவற்றை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும். நேர்மை, ஆற்றல், தரம், தகுதி என்ற நிலையில் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.

30 வயதுக்கு குறைவான இளைஞர்கள் அரசியலில் மாற்றத்துக்கான விடியலைத் தேடிக்கொண்டுள்ளனர். இந்த இளைய சமுதாயம் எதிர்காலத்தில் இந்த கொடுமைகளையெல்லாம் திருத்தும் என்ற நம்பிக்கை ஒருபுறம் உள்ளது.தகுதியே தடை என்ற நிலையை மாற்றுங்கள். இதுதான் வாக்காளனுடைய இன்றியமையாத கடமை என்ற புரிதல் வந்தாலே நமது ஜனநாயகம் வெற்றி பெறும்.
பூமி பந்து சுற்றுவதால் ஏற்படும் கால வர்த்த மானங்களில் மனமிருந்தால் மாற்றங்களை பொதுவாழ்வில் திடமாக கொண்டு வரலாம். அரசியல் சதுரங்கத்தில் நேர்மையாக களமாடினால் வரலாற்று பதிவில் நேர்மையான இடமிருக்கும். அரசியல் என்பது அம்சதுளிகா மஞ்சமல்ல என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணரவேண்டும்.

கே எஸ் ராதாகிருஷ்ணன்