தெலங்கானாவில் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்! – AanthaiReporter.Com

தெலங்கானாவில் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!

நம் நாட்டில் கடைசி மாநிலமான தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது குறித்த அறிவிக்கையைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதை யொட்டி இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. அங்கு முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் முன்பே சட்டப்பேரவையை கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்து முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க தயாரானார்.இதன்படி, ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அதோடு சேர்த்து தெலங்கானாவுக்கும் நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்து டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவித்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 7-ம் தேதி மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த முறைப்படியான அறிவிக்கையை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். 20-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாளாகும்.

டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது, 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் 2.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 32, ஆயிரத்து 574 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. தேவைக்கு ஏற்ப இது அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே காபந்து முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு நேற்று பி படிவத்தை வழங்கினார். 107 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் டிஆர்எஸ் கட்சி அறிவித்துவிட்டதால், வேட்புமனுத்தாக்கல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முதல்வர் சந்திரசேகர் ராவ் வரும் 14-ம் தேதி மேடக் மாவட்டத்தில் உள்ள கஜ்வேல் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது தெலங்கு தேசம் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும், தெலங்கானா ஜன சமிதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக ஆகியவையும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.