நரேந்திர மோடி பயோபிக் ரிலீஸாகத் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு! – AanthaiReporter.Com

நரேந்திர மோடி பயோபிக் ரிலீஸாகத் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு!

நடக்க இருக்கும் தேர்தலில் மிகப் பெரிய பிரச்சார யுக்தி என்று நினைத்து பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் 23 மொழிகளில் தயாராகியுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த சூழலில் இந்தத் தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை, பி.எம்.நரேந்திர மோடி என்ற பெயரில் இந்தி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சாமானியன், பிரதமராவதுதான் படத்தின் கதை. ஓமங்க் குமார் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷி தோன்றுகிறார். இந்த படம் நாளை 11-ம் தேதி வெளியாக இருந்தது.

முன்னதாக இந்த படத்தின் வெளியீட்டை தள்ளிப் போட உத்தரவிடுமாறு மும்பை கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த படத்தின் வெளியீடு, தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது என கூறப்பட்டது. ஆனால் இதை தேர்தல் கமிஷன் கோர்ட்டில் நிராகரித்தது. இந்த படத்தை திட்டமிட்டபடி வெளியிட ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து வழக்கை மும்பை கோர்ட்டு முடிவுக்கு கொண்டு வந்தது. எனவே திட்டமிட்டபடி இந்த படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் இப்படம் தேர்தல் நேரத்தில் திரையிடப்படுவதாலும், தேர்தலில் மக்களைப் பாதிக்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

அதே சமயம் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற மனுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய நிவாரணத்துக்கு தேர்தல் ஆணையத்தை அணுகிப் பெறலாம் என்று அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு யு சான்று அளித்து உத்தரவிட்டது. இதனால், திரைப்படம் குறித்த தேதியான நாளை (11-ம் தேதி) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் இன்று திடீரென்று பிறப்பித்த உத்தரவில், தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்தைத் திரையிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் நேரத்தில் எந்த அரசியல் கட்சி குறித்தும், அரசியல் கட்சியோடு தொடர்புடைய எந்த தனிமனிதர் குறித்த வரலாற்றுத் திரைப்படம் திரையிடுவது, வெளியிடுவது, மக்களைப் பாதிக்கும். ஆதலால், எந்த மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கிறோம். இது தொடர்பாக வரும் புகார்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது