5 மாநில தேர்தல் அறிவிப்பு: 3ல் காங்கிரஸூக்கு வெற்றி வாய்ப்பு என தகவல்! – AanthaiReporter.Com

5 மாநில தேர்தல் அறிவிப்பு: 3ல் காங்கிரஸூக்கு வெற்றி வாய்ப்பு என தகவல்!

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் அறிவித்த நிலையில் 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு என்று சமீபத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. .

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. எனவே அந்த மாநிலங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும். எனவே 4 மாநில தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப் படுகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பாஜக, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், “ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டப்பேரவை கலைக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இந்த தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்”என்று கூறினார்.

இதனிடையே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் 200 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ராஜஸ் தானில் காங்கிரஸ் 142 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது

சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது, இங்கு உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள்:

சத்தீஸ்கர்: முதல் கட்டத் தேர்தல் – நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு

2-ம் கட்டத் தேர்தல்- நவம்பர் 20-ம் தேதி

மத்திய பிரதேசம்: நவம்பர் 28-ம் தேதி

மிஸோரம்: நவம்பர் 28-ம் தேதி

ராஜஸ்தான்: டிசம்பர் 7-ம் தேதி

தெலங்கானா: டிசம்பர் 7-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.