முட்டை சைவம்தான்.. சைவம்தான்.. சைவம்தான்!- ஆய்வு முடிவு – AanthaiReporter.Com

முட்டை சைவம்தான்.. சைவம்தான்.. சைவம்தான்!- ஆய்வு முடிவு

நம்மில் பல கேள்விகளுக்கு உறுதியான விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி…!! நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். அதே சமயம் சிலர் முட்டையை சைவம் தான் என்று உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்…

மேலும் சைவ சாப்பாட்டைத் தவிர வேறு எதையுமே சாப்பிடமாட்டோம் எனச் சொல்லும் அதிதீவிர சைவர்கள் கூட, முட்டை பிரியர்கள் ஆக இருப்பார். ஆனால், முட்டை சைவமா, அசைவமா என குழப்பத்தில் ஒருவேளை அசைவம் சாப்பிடுகிறோமோ என லேசான குற்றவுணர்ச்சி இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காகவே சமீபத்தில் சூப்பர் தகவல் வெளியாகி இருக்கிறது .

அதாவது ஓர் ஆய்வின் அடிப்படையில் முட்டை என்பது சைவ உணவுதான் என நம்பப்பட்டிருக்கிறது. முட்டை என்பது கரு, வெள்ளைக்கரு, முட்டை ஓடு ஆகியவற்றால் ஆனது. இவற்றில் இருப்பது எல்லாமே புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் தான். முட்டைக்கரு, வெள்ளைக்கரு எதிலுமே வளர்ச்சி அடைந்த ஒரு உயிரின் கரு இருப்பதில்லை. முட்டையிடப்பட்டு ஒரு உயிராக வளர்ச்சி அடைவதற்கான காலத்திற்கு முன்பாகவே நாம் அதை சாப்பிட்டு விடுகிறோம்.

மேலும், 6 மாத வளர்ச்சியை அடைந்துவிட்ட ஒரு கோழி ஒன்றிலிருந்து – ஒன்றரை நாட்கள் இடைவெளியில் முட்டையிடும் ஆற்றலோடு இருக்கிறது. இந்த முட்டைகள் எல்லாமே சேவல் கோழியினால் கருவுற்று இடப்படும் முட்டை இல்லை. இவை, கருவுறா முட்டைகள். எனவே, நாம் கடைகளில் வாங்கிச்சாப்பிடும் முட்டைகள் சைவம் தான் உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே, முட்டை அசைவமா என்ற குழப்பத்தை தவிர்த்து வேளைக்கு ஒரு ஆம்ப்லெட், ஆஃபாயில், அவித்த முட்டை என அசத்துங்கள்!

எக்ஸ்ட்ரா தகவல் :

வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் முட்டையில்தான் உள்ளது.தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம் அதுவும் இந்த முட்டையில் வெள்ளை கருவில் அதிகமாக உள்ளது. தினமும் முட்டை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படாதாம்! இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளனவாம்.தினமும் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. முட்டையில் தைராய்டு  ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயடின் உள்ளது. குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒருநாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.