பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து! – மசோதா நிறைவேற்றம் – AanthaiReporter.Com

பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து! – மசோதா நிறைவேற்றம்

நம் நாட்டில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வு, வியாபார நோக்கம், அதிகார வர்க்கங்களின் அலட்சிய போக்கு, மக்களின் தெளிவின்மை, வறுமை, கிராமங்களின் பின்னடைவு உள்ளிட்ட எக்கச்சக்கமான காரணங்களால் கல்வி வளர்சியில் இந்தியாவை வளர்ச்சி அடையாத நாடாகவே வைத்துள்ளது. இந் நிலையில் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

அதனால் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அவை மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு விட்டதால் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதும் சட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 8-ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் என அறிவித்து படித்த வகுப்பிலேயே மீண்டும் படிக்க வைக்கும் முறை இல்லை. ஆனால், இந்த சட்டப்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு ஒன்று வழங்கப்படும்.

அதிலும் தேர்ச்சி அடையாவிட்டால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.