நக்கீரன் கோபால் தேசத் துரோக வழக்கில் கைது! – AanthaiReporter.Com

நக்கீரன் கோபால் தேசத் துரோக வழக்கில் கைது!

தமிழ் பத்திரிகையுலகில் மூத்த பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆவார். இவர் ஆட்டோ ஷங்கர் முதல் வீரப்பன் வாழ்க்கை சம்பவங்கள் வரை அனைத்தையும் புலனாய்வு செய்து அதனை நக்கீரன் இதழில் வெளியிட்டதன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு கோபால் பிரபலமானார். இந்நிலையில் இவரை இன்று விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். புனே செல்ல அவர் விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தார்.

முதற்கட்ட தகவலின்படி தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நக்கீரன் இதழில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் ஆளுநர் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பாக அளித்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அவரை தேசதுரோக வழக்கில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெயில் பீஸ்:

தேசத் துரோகம்’ என்பதற்கான விளக்கம் தெளிவாக இல்லாத நிலையில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான கருத்துகளை முடக்குவதற்கு முறைகேடாகப் பயன்படுத்தும் சட்டமாகவே இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1933 ஆம் ஆண்டில் பெரியார் “இந்த ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?” என்று அவர் நடத்திய ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய தலையங்கத்துக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி, தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்து பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனையையும், பதிப்பாளரான அவரது தங்கை கண்ணம்மாளுக்கு 6 மாத சிறைத் தண்டனையையும் விதித்தது. அதன் காரணமாக, அப்போது ‘குடிஅரசு’ பத்திரிகையை நிறுத்திய பெரியார், அதற்கு மாற்றாக ‘புரட்சி’ என்ற ஏட்டைத் தொடங்கினார். அப்போது பெரியார், “இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்” என்று எழுதினார்.

1922 இல் காந்தியார்கூட இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, தேசப் பற்று என்பதை சட்டத்தின் மூலமாக உருவாக்கி விட முடியாது என்றே நீதிமன்றத்தில் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது