ஆணுறை விளம்பரத்துக்கு மத்திய அரசு தடை! – தொடரும் சர்ச்சை! – AanthaiReporter.Com

ஆணுறை விளம்பரத்துக்கு மத்திய அரசு தடை! – தொடரும் சர்ச்சை!

இனி தொலைக்காட்சி சேனல்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது’ என்ற மத்திய அரசின் உத்தரவு, பல்வேறு பெற்றோர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. “ஆணுறை விளம்பரங்களைத் தொடர்ந்து பார்க்கின்ற குழந்தைகளிடம் நாகரிகம் அற்றுப் போகும். அவர்களின் உணர்வுகள் வல்கராக மாறிவிடும். அவர்கள் செயல்கள் மற்றவர்களை வெறுப்பூட்டுகிற மாதிரி மாறிவிடும். அதனால் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் டி.வி பார்க்கும் நேரமான காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை கட்டாயம் ஒளிபரப்பக் கூடாது” என்றிருக்கிறார் மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஸ்மிருதி இரானி.

மத்திய அரசு இந்த திடீர் தடை விதிப்பு என்பது பிற்போக்கான நடவடிக்கை என்று சமூக நல அமைப்பான இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செயல் இயக்குநர் பூனம் முட்ரேஜா “குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் சுகாதாரம், பாலியல் நோய்த் தடுப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் ஒருபுறம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் செய்தி ஒளிபரப்புத் துறை முக்கிய நேரத்தில் ஆணுறை விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது நமது நாட்டில் பல ஆண்டுகளாக மேம்பட்டு வந்த பாலியல் நோய்கள் தடுப்பு தொடர்பான முன்னேற்றத்தைப் தடுத்த நிறுத்தும் செயலாகும்.

இப்போதும் 5.6 சதவிகித ஆண்கள் மட்டும் ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டில் மட்டுமின்றி பாலியல் நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் ஆணுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டில் ஆண்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சியில் இருந்து மட்டும் குழந்தைகள் தகவல்களைத் தெரிந்துகொள்வது இல்லை. இணையத்தின் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். எனவே, குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு ஆணுறை விளம்பரங்களுக்குத் தொலைக்காட்சியில் முக்கிய நேரங்களில் தடை விதித்திருப்பதாகச் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே சமயம் , இந்த விளம்பரத்தில் சமீபத்தில் நடித்துள்ள நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் எய்ட்ஸ் வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இத் தடைக்கு எதிராக ராக்கி சாவந்த் கூறுகையில், “சமூக சேவையாக நினைத்தே நான் ஆணுறை விளம்பரங்களில் நடித்தேன். இதற்கு முன்னதாக சன்னி லியோன் மற்றும் பிபாஷா பாசு ஆகியோர் நடித்தபோது அரசு தடை செய்யவில்லை. அப்படியிருக்கும் போது, நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தபோது மட்டும் அது பற்றி பேசியவுடன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது” என்றும் அவர் அப்செட்டாக கூறியுள்ளார்.

.

ஆனால் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா , ”இந்த தடை அவசியமே! குழந்தைகளுக்கு தேவையில்லையாத விஷயங்களை அவர்கள் பார்க்கும் நேரத்தில் காட்டுவது அவசியமற்றது. சில வீடுகளில் இது என்ன கண்டம் என்று குழந்தைகள் கேட்டிருப்பதைக் கண் கூடாக பார்த்து இருக்கிறேன். அதற்கு பெற்றோரும், பதில் சொல்லாமல் தங்கள் பேச்சை வேறு பக்கம் திசைதிருப்பினார்கள், எனவே இந்த தடை வேண்டும்” என்றார்.