நான் ஏன் இந்தத் தேர்தலில் நிக்கறேன் தெரியுமா? – விஷால் விளக்கம்! – AanthaiReporter.Com

நான் ஏன் இந்தத் தேர்தலில் நிக்கறேன் தெரியுமா? – விஷால் விளக்கம்!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது.நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. இந்தநிலையில் சுயேட்சையாக 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. ஏற்கனவே அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக மருதுகணேஷ், டிடிவி தினகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று நடிகர் சங்க செயலாளர் விஷால் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக நடிகர் விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி T- நகரில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அங்கிருந்து கிளம்பி ராமாவரத்தில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிலைக்கு சுமார் 8:30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அடையாறில் அமைந்துள்ள செவாலியர் சிவாஜியின் மணிமண்டபத்திலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலைக்கு 10.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சமாதிக்கும் , முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மாலை 4.35 மணியளவில் ஆர்.கே நகரிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வரிசையில் நின்று விஷால் மனுத்தாக்கல் செய்தார்.சட்ட ஆலோசகர் சார்லஸ், நடிகர் விஜய் பாபு, ரமணா, R.k.சுரேஷ், உதயா ஆகியோர் உடன் இருந்தனர்.

மனுத்தாக்கல் முடிந்த பின்னர் நடிகர் விஷால் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகள்உம் விஷால் அளித்த பதில்களும் இதோ:

திடீரென்று ஏன் தேர்தலில் நிற்கிறீர்கள்?

ஏன் நிற்கக்கூடாது என்று கேட்கிறேன், விஷால் ஒரு நடிகராக இல்லாமல் மளிகை கடை வைத்திருப்பவராக இருந்தால், தொழிலதிபராக இருந்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது. அரசியல்வாதியாக இல்லாமல் சாதாரண ஆர்.கே.நகர் மக்கள் பிரதிநிதியா வந்திருக்கிறேன்.

விஷாலுக்கு என்ன கொள்கை இருக்கிறது?

மக்களுடைய கொள்கையை முன் வைத்து நிற்கிறேன். மக்களுடைய அடிப்படை வசதிகளிலிருந்து எல்லா பிரச்சினைகளையும் முன்வைத்துதான் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

ஆளுங்கட்சியின் என்னென்ன தவறுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்பீர்கள்?

தவறுகள் என்பதை விட இந்த தொகுதி மக்கள் ஆகாயத்தை கேட்கவில்லை அடிப்படை விஷயத்தை கேட்கிறார்கள். பல பிரச்சினைகள் உள்ளன. நிறைய விஷயங்கள் உள்ளது எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய அவர்களது பிரதிநிதி இருக்க வேண்டும்.

அதைப்பற்றித்தான் பிரச்சாரம் அமையுமா ?

அதைப் பட்டியல் போட்டு பிரச்சாரம் நடக்கும். அவர்களுக்கு என்ன கேட்கணும் என்று தெரியும். 100 சதவீத மக்கள் வாக்களிக்கும் போது அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பது தெரியவரும். ஓட்டு போட்டுவிட்டு ஐந்து வருடம் கழித்துதான் எல்லாம் என்று இருப்பதை விட்டு அவர்கள் உரிமையை விளக்கும் விதமாக இருக்கும். ஆர்.கே.நகர் மக்களின் ஒற்றுமையும் நேர்மையும் விளக்கும் தேர்தல் இது.

தவறு எல்லா இடத்திலும் நடக்கிறது. அதற்கு முதலில் நீங்க ஒரு கட்சியைத் தானே ஆரம்பிக்கணும்?

நீங்கள் கேட்கும் கேள்வியே பிரச்சினையாக உள்ளது, இது மாதிரி கேட்டு கேட்டுத்தான் பிரச்சினையே, மக்கள் பிரதிநிதியா சென்று கேட்கலாம்.

234 தொகுதிகள் இருக்கிறது எப்படி தீர்க்கப் போகிறீர்கள் அதற்கு ஒரு கட்சி வேண்டுமே?

நான் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து மட்டும் தான் பேசுகிறேன்.

சேரன் நீங்கள் பதவி விலக வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறாரே?

அப்படி எதுவும் இல்லை, நடிகர் சங்கத்தை மாற்ற நினைத்தோம். இளைஞர்கள் இறங்கினோம், சரி செய்தோம். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தில் ஈடுபட்டோம் அதையும் சரி செய்து வருகிறோம். நடிகர் சங்கத்திலிருந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட போதும் இதே பிரச்சினை வந்தது. நான் தேர்தலில் நிற்பது அரசியல் கட்சி ஆரம்பிக்க அல்ல, மக்களுக்கு நல்லது செய்யணும் அதற்கு மக்கள் பிரதிநிதியா வந்திருக்கிறேன்.

உங்களுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அழைப்பு விடுத்துள்ளார்களே?

ஆமாம் நான்கைந்து எம்.எல்.ஏக்கள் அழைத்தார்கள், குஷ்பு, திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா வாழ்த்தினார், அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்தினார். மாற்றுக்கட்சியிலிருந்து வாழ்த்தும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சாலைத்தடுப்பினை தாண்டுவது, ஓடிச்சென்று மக்களை சந்திப்பது எல்லாம் சினிமா படம் போல் இருக்கிறதே?

மக்களில் ஒருவனாக மக்கள் பிரச்சினைகளுக்காக வாக்கு கேட்டு தேர்தலில் நிற்கிறேன் அவ்வளவுதான்.

உங்கள் நேரடிப் போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?

மக்களே தெரிவித்து விட்டார்களே, மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது அதை வைத்து பிரச்சாரம் செய்வேன்.

மக்களைக் காப்பாற்ற நடிகர்கள்தான் வரவேண்டுமா?

இல்லை, விஷால்தான் வரவேண்டும் என்று சொல்லவில்லை, இளைஞர்கள் வாருங்கள் மக்கள் பிரச்சினையில் இறங்குங்கள் என்று தான் சொல்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தலைவராக விஷால் வந்தபிறகு அசோக்குமார் தற்கொலை செய்துள்ளார். அதையே உங்களால் தடுக்க முடியவில்லை ஆர்.கே.நகர் மக்கள் பிரச்சினையை எப்படி தீர்க்கப்போகிறீர்கள்?

அசோக்குமார் தற்கொலைக்கான காரணத்தை அவர் கடிதமாக எழுதி வைத்து சம்பந்தப்பட்டவர் மீது போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டு அவர்கள் தேடி வருகிறார்கள், ஆகவே அது பற்றி தவறாக பேச முடியாது. வட்டி பிரச்சினை நான் வருவதற்கு முன்பிருந்தே உள்ளது. நீங்கள் இப்படி கேட்பது என் மனதை வருந்தச்செய்கிறது.

இவ்வாறு விஷால் பேட்டி அளித்தார்.

மேலும் பிஜேபி சார்பில் கரு.நாகராஜன் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் மனு தாக்கல் செய்தார். மேலும் சுயேச்சைகள் பலரும் மனு தாக்கல் செய்தனர்.
கோவையைச்சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது ராஜவேடம் அணிந்து குதிரையில்வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவர் ஏற்கனவே தொப்பி சின்னத்தில் போட்டியிட்டதால் அதே தொப்பி சின்னம் தரும்படி குறிப்பிட்டுள்ளார். மற்றொரு சுயேட்சை வேட்பாளர் கோவையைச்சேர்ந்த வக்கீல் தனலட்சுமி டெங்குவால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை சுட்டிக்காட்டும் வகையில் டெங்குகொசுபோன்று வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்தார். ஜோலார்பேட்டையைச்சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் மனிதன் என்பவர் பின்னால் நடந்து வந்து நூதனமான முறையில் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதுவரை ரமேஷ், தமிழரசன் உட்பட 38 வேட்புமனு தாக்கல் செய்து
உள்ளனர்.