இட்லி தோசையில் இம்புட்டு நன்மை இருப்பது தெரியுமா? – AanthaiReporter.Com

இட்லி தோசையில் இம்புட்டு நன்மை இருப்பது தெரியுமா?

இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் இன்றளவும் சில பேருக்கு தெரியாது அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது என்றெல்லாம் முன்னரே தகவல் வெளியான நிலையில் இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய கனிம ஊட்டச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள இட்லி, தோசை ஆகிய தென்னிந்திய உணவுகள் பெரிதும் உதவுகின்றன என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது உணவிலிருந்து இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய கனிமங்களை உடல் கிரகித்துக்கொள்வதில் அதிகளவிலான இந்தியர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினை சைவ உணவுப் பழக்கம் உடையவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு தென்னிந்திய சைவ உணவுகள் வாயிலாகத் தீர்வு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்களின் ஆய்வுக் கட்டுரையில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ”நாம் உட்கொள்ளும் உணவிலேயே போதுமான அளவு இரும்பு மற்றும் துத்தநாகம் இருந்தாலும், அவற்றை உடல் கிரகித்துக் கொள்ள உதவும் மினரல்கள் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. சைவ உணவுகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அதனாலேயே இரும்பு மற்றும் துத்தநாகத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் அளவு குறைவாக இருக்கிறது.

ஆய்வுகள், பழைய முறைகளைப் பயன்படுத்தி அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உருவாக்குவதை விட, கிடைக்கும் உணவுப் பொருட்களில் இருந்து மினரல்களை கிரகித்துக் கொள்ளும் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவுகளில் இருந்து இரும்பு மற்றும் துத்தநாக உடல் கிரகிப்பதைக் குறைக்கும் பைடிக் அமில (phytic-acid content) பொருட்களைத் தவிர்க்கவோ குறைக்கவோ வேண்டும்.

இட்லி, தோசை, முளைகட்டிய பயிர்களை அதிகம் உட்கொள்ளும் தென்னிந்தியர்களின் உடல், இரும்பு மற்றும் துத்தநாகத்தை நல்ல முறையில் கிரகித்துக் கொள்கிறது. இதற்குக் காரணம் இத்தகைய உணவு வகைகளில் நொதித்தல், ஊறவைத்தல், முளைத்தல் ஆகிய செயல்முறைகள் நடைபெறுகின்றன.இதன்மூலம் பைடேட்டுகள் குறைகின்றன. இரும்பு மற்றும் துத்தநாக கிரகிப்பைக் குறைக்கும் பைடேட்டுகளின் அளவு கொய்யா, நெல்லிக்காய், மீன், கறி ஆகியவற்றில் குறைவாக உள்ளதால் அவற்றை அதிகம் உட்கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளன.