11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற ரெஞ்சில் பலராலும் எதிர்பார்த்து வந்த 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தள்ளுப்படி செய்து விட்டது சென்னை ஐகோர்ட். இதை அடுத்து இப்பிரச்ட்னை தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா ஒட்டன்சத்திரம் சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இப்பிரச்சினை அவைத் தலைவர் முன்னும் விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் இன்னும் சபாநாயகர் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் ஒரு தீர்ப்பை முன்கூட்டியே வழங்க முடியாது. தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க வில்லை. முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் தலையிட்டு தகுதி நீக்கம் தொடர்பாக முடிவெடுக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது.

மேலும் சபாநாயகர் முன் நிலுவையில் உள்ள ஒரு பிரச்சினை குறித்து அவர் முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? இக்கேள்விக்கு பதில் காண கோரிய ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.சபாநாயகர் பாரபட்சமாக செயல்படும்போது கோர்ட் தலையிடலாம் என மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டாலும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கு காரணமாக, இம்மனுக்கள் மீது முடிவெடுக்கும்படி சபாநாயருக்கு உத்தரவிட முடியாது.

அதே நேரத்தில், சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை. இருந்தாலும், இதுபோன்ற நிலையில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்பதும் கேள்விக்குறிதான். எனவே, அரசியலமைப்பு சட்டம் பிரிவு 226 ல், உயர் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட்டு, உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆகவே, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்கம் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்”என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்புக்கு திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, “11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்ற கோரிய வழக்கு ஆகியவைகள் தள்ளுபடி செய்யப்பட்டதில் திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும். மக்களின் கேள்வியை பிரதிபலிக்கும் வகையில் திமுகவின் சட்டப்போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்படும். சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது எனில் எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது”என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!