இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லையே! – ஸ்டாலின் சோகம்! – AanthaiReporter.Com

இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லையே! – ஸ்டாலின் சோகம்!

பார்லிமெண்ட்  தேர்தலில் 37 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெறவுள்ளது. சட்டமன்ற இடைத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை பெற்று வெற்றி பெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நிறைவடையவுள்ள நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அவருக்கு, தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி சிலைக்கு அருகில் நின்று தொண்டர் கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘மக்களவை, சட்டமன்றத் இடைத் தேர்தல்களில் நாம் எதிர்பார்த்த முடிவு கிடைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த கருணாநிதியி ன் உடன்பிறப்புகளுக்கு நன்றி. இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு கருணாநிதி இல்லை என்பதுதான் எனக்கு மிகப் பெரிய வருத்தம்.

அதனால், அவரது சிலைக்கு கீழே நின்று பேசுகிறேன். வெற்றிபெற்றத் தந்த உடன்பிறப்புகளுக்கு நன்றி. சில தொகுதிகளில் இழுபறி நீடித்துவருகிறது. எனவே, ஆட்சியைத் தக்கவைக்க ஆட்சியாளர் கள் ஏதேனும் மோசடி செய்யும் திட்டத்தில் இருக்கின்றனர். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்’ என்று பேசினார்.

இதை அடுத்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக திமுக ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கழக தலைவர் ஸ்டாலின், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்றுள்ள மாபெரும் வெற்றியை, தலைவர் கலைஞர் அவர்களுக்கு சமர்ப்பித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.