தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்! – AanthaiReporter.Com

தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்!

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 -ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக் அலுவலகம் அறிவித்துள்ளது. அதே சமயம் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மறுநாளே மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் மறைவால் திமுகவின் தலைமை பதவி காலியாக உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் திமுகவின் அடுத்த தலைவராக விரைவில் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை நேரில் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை, 14 -ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மிக முக்கிய அறிவிப்பாக பார்கப்பட்டது. ஏனெனில், திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதர்பார்ப்பை எழுப்பிய நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே இந்த அவசார செயற்குழு கூட்டம். கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன”என்று தெரிவித்தார்