கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! -திமுக அறிவிப்பு – AanthaiReporter.Com

கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! -திமுக அறிவிப்பு

அதிரடியாக நடுரோட்டில் இருந்த ஒரு கோயில் விவகாரத்தால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை, சொத்து வரியை திடீரென உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான தமிழக அரசு, மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் மானிய உதவித் தொகைகளைப் பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தா மல் வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது தமிழக அரசு.

எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக் கோரியும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வரும் 27-ம் தேதி (வெள்ளிக் கிழமை), காலை 10 மணியளவில், மாவட்டச் செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், நகர செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சிக் கழக நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி உட்பட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்” என்று திமுகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50%-லிருந்து 100% வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நம் தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக குப்பைக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை 12 லட்சம் பேர் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்களின் பேரில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.540 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப் படுகிறது. இதே போல், மற்ற மாந கராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகளிலும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டு வருகிறது.

சென்னையில் 1998-க்கு பிறகு சொத்துவரி மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரியை உயர்த்த பலமுறை பரிந்துரை வழங்கியும் சொத்து வரியில் மாற்றம் செய்யவில்லை. இதனால் 1998-ம் ஆண்டிலிருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்குச் சொத்து வரி 50 விழுக்காடு உயர்த்தியும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு உயர்த்தியும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தி வசூலிக்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையின்படி, 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரி உயருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, தமிழக அரசு இந்த புதிய அரசாணையைச் சமர்ப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்க்து.