‘நானும் ரெளடிதான்’ – சவரக் கத்தி டீசர் விழாவில் மிஷ்கின்! – AanthaiReporter.Com

‘நானும் ரெளடிதான்’ – சவரக் கத்தி டீசர் விழாவில் மிஷ்கின்!

மனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன??? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது… ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது…. இது ஒரு புறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத கத்தியின் மறுபுறம் இருக்கிறது…. அது தான் சிகை அலங்கார கலைஞர்களின் ‘சவரக்கத்தி’. அத்தகைய சவரக்கத்தியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான், மிஷ்கின் கதை எழுதி, ‘லோன் உல்ப் புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்து இருக்கும் ‘சவரக்கத்தி’. ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவெடுத்து இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

savarakathi oct 15

விமர்சையாக நடைபெற்ற இந்த டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே பாக்கியராஜ், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் நாசர், இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் சசி, நடிகர் பிரசன்னா, செல்வா, எஸ் வி ஆர், தமிழச்சி தங்கப்பாண்டியன், மருது, நந்த கோபால், வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர் ரகுநந்தன், பா வா செல்லதுரை மற்றும் ‘சவரக்த்தி’ படக்குழுவினரான தயாரிப்பாளர் – எழுத்தாளர் மிஷ்கின், இயக்குனர் ஜி ஆர் ஆதித்யா, ராம் – பூர்ணா, ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் அரொல் கொரெலி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

“ஞானத் திமிர் தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம்…. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலைஞன் மிஷ்கின்…அவருடைய படங்கள் யாவும் நம் மனதில் ஆழமாக பதியுமாறு தான் இருக்கும்… அந்த வகையில் ‘சவரக்கத்தி’ திரைப்படமும் மிஷ்கினின் அடுத்த ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறினார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.

விழா மேடையில் பேசிய பூர்ணா, நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்ற இருந்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் கிடையாது. நான் முதல் படத்தில் நடித்தபோது எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போது சினிமாவில் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது புரிந்தது. படங்கள் கிடைக்காததால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தநேரத்தில், தெலுங்கில் நான் நடித்த படம் பெரிய ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்பதுகூறுவதை எனக்கு கிடைத்த வரமாகவே கருதுகிறேன் என்று மேடையிலேயே கண்கலங்கினார்.

இயக்குனர் கே பாக்கியராஜ், “பொதுவாகவே மக்கள் இரண்டு இடங்களில் உலக அரசியல் பற்றியும், உலக செய்தியை பற்றியும் காரசாரமாக விவாதிப்பார்கள்…. ஒன்று ஐ நா சபை, மற்றொன்று முடி திருத்தகம்…இப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதை களம் எப்படி மிஷ்கினின் சிந்தனையில் உதயமானது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது…இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை… ஆனால் இரண்டு இயக்குனர் சிகரங்களை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கி இருக்கும் ஜி ஆர் ஆதித்யா அவர்களுக்கும், ஒட்டுமொத்த ‘சவரக்கத்தி’ படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்…’ என்று உற்சாகத்த்துடன் கூறினார் இயக்குனர் கே பாக்கியராஜ்.

சவரக்கத்தி படத்தின் எழுத்தாளரும், தயாரிப்பாளருமான மிஷ்கின் பேசும் போது, ”என்னோட அஞ்சு வயசில் நான் பாத்த ‘பிச்சை’ என்னும் சிகை அலங்கார கலைஞரின் வாழ்க்கை கதைதான் இந்த ‘சவரக்கத்தி’. இந்த படத்தில் நடித்த ராம் மற்றும் பூர்ணா ஆகிய இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கின்றனர்…. முதல் முறையாக ஒரு நகைச்சுவை கதையை நான் எழுதி இருக்கிறேன்… நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் திரைப்படமாக எங்களின் ‘சவரக்கத்தி’ திரைப்படம் இருக்கும்.

சலூன் கடையை பொறுத்தவரை யு.எஸ்., சிங்கப்பூர் என்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரே மாதிரிதான்! இந்த கதையை எழுதி முடித்தப்போது இதில் வரும் கதாநாயகன் பாத்திரத்திற்கு என் மனதில் முதலில் வந்தவர் இயக்குனர் ராம் தான்! தமிழ் சினிமாவில் நான் பார்த்தவர்களின் அழகான ஒரு ஆம்பளை ராம்! அதனால அவரை நடிக்க வைத்திருக்கிறேன். காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் நடக்கிற ஒரு கதை தான் இப்படம்.

பொய்யே வாழ்க்கையாக கொண்ட கேரக்டர் ராமுடையது. எப்போதுமே வயிற்றில் குழந்தையை சுமந்துகொண்டிருக்கிற ஒரு கேரக்டர் பூர்ணா ஏற்றிருக்கும் சுபத்ரா! கேரளாவில் இருந்து உதயமான கதாநாயகிகளில், தன்னுடைய குரலுக்கு தானே தமிழில் டப்பிங் செய்த முதல் கதாநாயகி பூர்ணா. அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….நான் ரௌடியாக நடித்திருக்கிறேன். இந்த மூன்று கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதை தான் படம்! எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஒரு அருமையான படமாக இதை இயக்கியிருக்கிறார் என் தம்பி ஆதித்யா! உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்