பெட்ரோல், டீசல் விலை ஜூன் 16 முதல் தினமும் மாற்றியமைக்க முடிவு! – AanthaiReporter.Com

பெட்ரோல், டீசல் விலை ஜூன் 16 முதல் தினமும் மாற்றியமைக்க முடிவு!

இந்தியா முழுவதும் இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்க எதிர்ப்பு எழுந்தபோதும் இந்த முறை  நீடித்து வருகிறது.

இந்நிலையில் தினந்தோறும் விலையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 16 ம் தேதி இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஐந்து நகரங்களில் கடைபிடிக்கும் சோதனை அடிப்படையிலான திட்டத்தை நீட்டிக்கும் வகையில், ஜூன் 16 முதல் அனைத்து நகரங்களிலும் மேற்கூறப்பட்ட திட்டம் கடைபிடிக்கப்பட இருப்பதாக எண்ணைய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று எண்ணைய் நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பின் போது பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், புதிய நடைமுறையை நாடு முழுவதும் கடைபிடிக்குமாறு உத்தரவிட்டதையடுத்து எண்ணைய் நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணையிக்கப்படும் நடைமுறை ஏற்கனவே பல நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.