ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க ஐகோர்ட் ஆர்டர்!

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க ஐகோர்ட் ஆர்டர்!

தமிழக அரசியலில் தனி ஒரு மனுஷியாக பலரை மிரட்டி அடிபணிய வைத்து வாழ்ந்து காட்டிய ஜெயலலிதாவின் மரணத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. கூடவே ஜெயலலிதாவின் சொத்துக்கள் அடுத்து என்ன ஆகும் என்பதும் அவரின் வாரிசுகள் குறித்து இன்னும் தெளிவான பதில் கிடைக்காத நிலையில் சொத்து வரி கணக்கு தொடர்பான வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த ஜெயலலிதா, கடந்த 1997-98-ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக கணக்கு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் 7.27 லட்சம் ரூபாய் சொத்து வரியாக தீர்மானித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

ஆனால், ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அவருக்கு 3.83 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், சொத்துக் கணக்கை ஜெயலலிதா முறையாக அறிவிக்கவில்லை என வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில், அவருடைய சொத்துகளை மறுமதிப்பீடு செய்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் அவரது சொத்து மதிப்பை மாற்றியமைத்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா? என்பது குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

error: Content is protected !!