நாங்களும் ரன் கொடுத்தோம்.. ஆனா ஜெயிச்சுட்டோமில்லே! – சென்னை அணி தோனி ஹேப்பி!

நாங்களும் ரன் கொடுத்தோம்.. ஆனா ஜெயிச்சுட்டோமில்லே! – சென்னை அணி தோனி ஹேப்பி!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்ற 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.

இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன், ராயுடு ஜோடி அபார துவக்கம் தந்தது. வினய் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய வாட்சன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் ‘சுழலில்’ ராயுடு (39) சிக்கினார். ரெய்னா 14 ரன்களில் திரும்பினார். சாவ்லா ‘சுழலில்’ தோனி (25) அவுட்டானார். அதிரடியாக விளையாடிய ஷாம் பில்லிங்ஸ் (56) அரை சதம் விளாசினார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டன. ஐந்தாவது பந்தில் ஜடேஜா சிக்சர் பறக்கவிட, சென்னை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராவோ, ஜடேஜா தலா 11 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், சென்னை அணி சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த த்ரில் வெற்றி குறித்து கேப்டன் தோனி, “2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இங்கு வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது. முதல் இன்னிங்ஸ், 2வது இன்னிங்ஸ் இரண்டுமே ரசிகர்களுக்குத் தகுதியான இன்னிங்ஸ்களே. அனைவருக்குமான உணர்ச்சி மட்டங்கள் உண்டு. ஆனால் இங்கு வீர்ர்கள் அமரும் இடத்தில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பவுலர் மீதும் பேட்ஸ்மென் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். பாசிட்டிவ் ஆன ஆற்றல் உதவுகிறது.

என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது, அதனால்தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என் உணர்வுகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன், இங்கு வெளியில் அமரும்போது கிடையாது. களத்தில் நம் உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுப்பதாகும்.

சாம் பிலிங்ஸ் இப்படிப்பட்ட ஆட்டத்தை ஆடிப்பார்ப்பது நன்றாக இருக்கிறது. ஆம் நாங்களும் ரன் கொடுத்தோம், கொல்கத்தா நன்றாக பேட் செய்தார்கள். இரு அணி பவுலர்களுக்கும் கஷ்ட காலம்தான். ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.”என்று கூறினார் தோனி.

error: Content is protected !!