தர்பார் – விமர்சனம்!

தர்பார் – விமர்சனம்!

நம்ம தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒரு பாணி இருக்கும். அது போல் ஒவ்வொரு நடிகருக்குமென தனி பாணி இருக்கும்.. ஆனால் ஒரு நடிகர் இயக்குநர் பாணியிலும், ஒரு இயக்குநர் நடிகர் பாணியிலும் உரு மாறி உருவாக்கியப் படம் என்ற முதல் பெருமையை அடைந்த படம்தான் ‘தர்பார்’. இது சரியா? தவறா என்றெல்லாம் யோசிக்காமல் ஒரு மாஸ் ஹீரோ-வை வைத்து மாஸ் இயக்குநர் கொடுத்துள்ள தர்பார் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை நம்பி மட்டுமே உருவாக்கப்பட்ட படம் இந்த தர்பார். அதனால் இப்படத்தை எந்த வித எதிர்பார்ப்புமில்லா மல், போய் பார்ப்போருக்கு போதுமான ரிலாக்ஸ் தரும் படமே தர்பார்.

கதை என்ன-ன்னு கேட்டா ரஜினிக்கு எது சரியா வருமோ.. அதுதான்.. அதாவது டெல்லியில் போலீஸ் ஆபிசராக இருக்கும் ரஜினியை ஹோம் செகரட்டரி அழைத்து மும்பை போதை நகர மாகிப் போச்சு..அதை அழிக்கறதுக்க்காக மும்பை போலீஸ் கமிஷனரா அனுப்பறொமுன்னு ஸ்பெஷல் டூட்டி அனுப்பறார்…போறதுக்கு முன்னடியே தாடியோட-தான் வேலை செய்வேன்-னு எக்ஸ்ட்ரா பர்மிஷன் வாங்கிட்டு மும்பை வாரார் ரஜினி ( ஆதித்யா அருணாசலம்) . வந்து எறங்கி சார்ஜ் எடுக்கறதுக்கு முன்னாட்டியே  ‘ஐ எம் ஆல்ரெடி இன் சார்ஜ்-ன்னு சொல்லியபடி போதைப் பொருள் விற்பவர்கள், பெண்களை குறிப்பாக சிறுமிகளை கடத்துபவர்கள் என அம்புட்டு பேரையும் அதிரடியாய் பிடித்து ஜெயிலில் போட்டு சிட்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றார்.

அந்த மெகா ரெய்டில் மத்திய அரசையே பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒரு தொழிலதிபர் மகனும் சிக்க, அவன் தன் செல்வாக்கால் சிறையில் இருந்து தப்பித்து வேறு நாட்டிற்கு போய் விடுகிறார். அதை தொடர்ந்து ரஜினி நடத்தும் அதிரடி போக்குதான் ‘தர்பார்’

முருகதாஸ் தான் ஒரு கிரியேட்டிவ் இயக்குநர் என்பதை மறந்து ரஜினி ரசிகனாக மட்டுமே நினைத்து உருவாக்கிய இந்த தர்பார் முழுக்க ரஜினி ரஜினி, ரஜினி மட்டுமே. அதிலும் அவரை இளமையாக துள்ளலுடன் தோன்றச் செய்வதாக எண்ணிக் கொண்டு நயனிடம் வழிவதை எல்லாம் ரசித்து தொலைய முடிவது நமக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் இது ரஜினி படம்-டா ..துப்பாக்கிக் குண்டை விட பட்டாக் கத்தி பெரிசு-டா-ன்னு உரத்தக் குரலில் சொல்கிறார்.

ஆனாலும் இண்டர்வெல் வரை போன பொங்கலுக்கு ரிலீஸான பேட்ட-யின் உற்சாகம் கொப்பளிக்க செகண்ட் பார்ட்டில் மகள் பாசத்தை விஸ்வாசம் தல-யை மிஞ்சி அசத்த முயன்றிருகிறார். அதை யெல்லாம் தாண்டி ’உங்களை கமிஷனர் பதவியிலேர்ந்து சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க’ என்ற ஆர்டர் நீட்டியதை வாங்கியபடி சோகமாக நடக்கும்போது கால் மடங்கி கீழே விழப் போய் சமாளிக்கும் போது தங்கப்பதக்கம் சிவாஜி-யை அப்படியே ஸ்கீரினில் கொண்டு வருவதைக் கூட கைத் தட்டி ரசிக்க ரஜினி ரசிகர்களால் மட்டுமே முடியும்!

நயன்தாரா மூலம் அவர் மேக் அப் செய்வதவருக்கு ஒரு அவார்ட் கிடைக்க சன்ஸ் இருக்கிறது. நயன்தாரா நடிப்பை விட தோற்றத்தை வெளிப்படுத்த அதிக அக்கறை எடுத்து கொள்பவர் என்றாலும் இதில் கொள்ளை அழகு! ரஜினியின் மகளாகவரும் நிவேதா தாமஸும் பல வித உணர்ச்சிகளை முகத்தில் கொட்டி தனிக் கவனம் பெறுகிறார்! அதிலும் அப்பாவுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி யோகி பாபுவுடன் அவர் சேர்ந்து செய்யும் வேலைகள் ரசிக்க வைக்கிறது. எல்லா வற்றையும் விட மேலாக யோகிபாபு காமெடியை கூட பல இடங்களில் ரசிக்க வைத்து விடுகிறார் ரஜினி என்பதுதான் ஹைலைட்! சுனில் செட்டி பாலிவுட் வில்லனாக வருபவருக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு சிறப்பு, அதே சமயம் அனிருத் பின்னணி டைட்டிலில் இருந்தே கவர விடாமல் செய்து பெயில் மார்க் வாங்கி விட்டார்.

ரஜினி ரஜினி என்று படம் முழுக்க சொன்னாலும் ஆங்காங்கே அவருக்கு வயது 70 என்பதை சொல்லிக் காட்டுவதும் ஒரு தமிழ் படத்தில் இம்புட்டு மும்பை ஆட்களை பயன்படுத்தி இருப்பதும் தர்பார் தரத்தை குறைத்து விட்டதென்னவோ உண்மை.

மொத்தத்தில் முருகாஸ் பெயிலாகி, ரஜினி பாஸாகி தன் ரசிகர்களுக்கு தேவையான இனிப்பு பொங்கல் வழங்கி இருக்கிறார்.

மார்க் 3 / 5

 

error: Content is protected !!