அமெரிக்காவில் அவசர நிலை? அதிபர் டிரம்ப மிரட்டல்! – AanthaiReporter.Com

அமெரிக்காவில் அவசர நிலை? அதிபர் டிரம்ப மிரட்டல்!

மெக்சிகோ எல்லைச் சுவருக்கு நிதி அளிக்காவிட்டால் அதன் ஒப்புதல் இன்றி பல மாதங்களுக்கு அல்லது, பல ஆண்டுகளுக்கே கூட அரசு நிர்வாகத்தை தொடர்ந்து முடக்கி அவசர நிலையைத் தம்மால் ஏற்படுத்த முடியும் என டிரம்ப் மிரட்டியதாகச் செய்திகள் வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகதிகள் மற்றும் குற்றவாளிகளின் ஊடுறுவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் வலிமையான தடுப்பு சுவர் அமைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக பட்ஜெட்டில் 500 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி செனட் சபையில் டிரம்ப் கோரினார். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் எல்லை சுவருக்கு நிதி கிடைக்காத காரணத்தால் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது. அதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு துறை ஊழியர்கள் பண்டிகை காலத்தில் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் செல்லும் நிலை ஏற்பட்டது. இப்படி அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகின்றன.

இந்த எல்லை சுவருக்கு நிதி ஒதுக்க முடியாது என்று எதிர்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது. அதேசமயம் எல்லை சுவருக்கு நிதி கட்டாயம் வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிடிவாதமாக உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்ற தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த பேச்சுவார்த்தையின் போது எல்லை சுவர் கட்ட நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யவும் தயார். எல்லை சுவருக்கு நிதி கிடைக்காவிட்டால் அரசு அலுவலகங்கள் பல வருடங்களுக்கு செயல்படாது என்று டிரம்ப் எச்சரித்ததாக செனட் சிறுபான்மை தலைவர் சக் ஸ்கமெர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதே சமயம் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் அந்த தகவலை உறுதி செய்தார். ”நான் அவ்வாறு கூறியது முற்றிலும் உண்மை. அரசு நிர்வாக முடக்கத்தை பல வருடங்கள் நீட்டிக்க தயார் என கூறினேன். ஆனால் அவ்வாறு நடப்பதற்கான சாத்தியம் இல்லை. அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்று எனது கட்சியினர் அனைவரும் விரும்புகிறார்கள். பாதுகாப்பான எல்லைகள் இல்லாமல் நாடு இல்லை என்பதை நான் பலமுறை கூறிவிட்டேன். இந்த அரசு நிர்வாக முடக்கம் சில நாட்களுக்கு மேல் நீடிக்காது என்று நம்புகிறேன்” என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் எல்லை சுவர் கட்டுவதற்கு மற்றொரு வழியாக நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தி வேகமாக சுவரை கட்டி முடிக்கும் திட்டமும் உள்ளது. எல்லை சுவர் மூலமாக கிரிமினல்கள், கடத்தல்காரர்கள், சட்டவிரோத குடியேறிகள் ஆகியோரை மட்டுமே தடுக்க நினைப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்