புது 2000 ரூபாய் கரன்சி வேணுமா? – பெட்ரோல் பங்க் போங்க! – AanthaiReporter.Com

புது 2000 ரூபாய் கரன்சி வேணுமா? – பெட்ரோல் பங்க் போங்க!

புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுவதை குறைக்கும்வகையில், குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் மூலம் ரூ.2 ஆயிரம்வரை பெற்றுக்கொள்ளும் வசதியை மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. டெபிட் கார்டுகளை தேய்த்து, பணம் செலுத்த பயன்படுத்தும் பி.ஓ.எஸ். கருவி மூலம் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியின் பி.ஓ.எஸ். கருவியை வைத்துள்ள 2,500 பெட்ரோல் பங்க்குகளில் இந்த வசதி அமலுக்கு வருகிறது. பி.ஓ.எஸ். கருவியில் டெபிட் கார்டை தேய்த்து, ஒரு நாளில் ஒரு நபர் ரூ.2 ஆயிரம் வீதம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

cur nov 18

முன்னதாக மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்ததாஸ், டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை வங்கிகளில் தந்து மாற்றிக்கொள்ளலாம் என்பது முடிவுக்கு வருகிறது. நாளை முதல் (இன்று முதல்) 2 ஆயிரம் மதிப்புள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். டிசம்பர் 30–ந்தேதி வரையில் இப்படி ஒருவர், ஒரு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.

அரசாங்கத்திடம் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடு (ரூ.2 ஆயிரம் அளவுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்ற வரம்பு), வங்கி கவுண்ட்டர்களுக்கு ஏராளமான மக்கள் வந்து, செல்லாத நோட்டுகளை மாற்றிச்செல்வதற்காகத்தான் விதிக்கப்படுகிறது.ஏராளமான மக்கள் வங்கி கவுண்ட்டர்களை சென்றடைய முடியவில்லை என்று எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.

அழியாத மை வைப்பது நடைமுறைக்கு வராத இடங்களில் ஒரே நபர் பல முறை, வங்கி கவுண்ட்டர்களுக்கு வந்து பணத்தை மாற்றிச்செல்கிற நிலையும் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் பிற மக்கள் பணத்தை மாற்றிச்சென்று பலன் அடைய முடியவில்லை.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, திருமண விழாக்களுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே திருமண விழாக்களுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் வரையில் பணம் எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஒரு திருமண விழாவுக்கு மணமகன் அல்லது அவரது பெற்றோர், மணப்பெண் அல்லது அவரது பெற்றோர் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும். இந்த வங்கி கணக்கு ‘கே.ஒய்.சி.’ என்னும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக பான் எண் (வருமான வரி நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பணம் எடுப்பவர், திருமண விழாவுக்காகத்தான் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சுய பிரமாண வாக்குமூலத்தையும் வங்கியில் அளிக்க வேண்டும்.

விவசாயிகளை பொறுத்தமட்டில் குறுவை (ரபி) பருவம் தொடங்குகிறது. எனவே விவசாய பயிர் சாகுபடிக்கான பொருட்கள் வாங்கவும், உரம் வாங்கவும் போதுமான பணம் கிடைப்பதை அவர்களுக்கு உறுதிசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று விளைபொருட்கள் கொள்முதலும் சுமுகமாக நடைபெற்றால்தான் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை கஷ்டமின்றி விற்பனை செய்ய முடியும்.

* விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமியங்களை செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன.

* விவசாய விளைபொருட்கள் சந்தை குழுவில் பதிவு செய்துள்ள வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கும், பல்வேறு செலவுகளுக்கும், வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வங்கியில் எடுத்துக்கொள்ளலாம்.

* விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடனில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம். கிசான்கார்டு என்னும் விவசாயிகள் அட்டை வைத்திருப்போருக்கும் இது பொருந்தும்.

* விவசாயிகள் காசோலைகள் பெற்று அவற்றை வங்கியில் செலுத்தினாலோ, ஆர்.டி.ஜி.எஸ். என்னும் ஆன்லைன் முறையில் அவர்களது வங்கி கணக்கில் பணம் மாற்றப்பட்டாலோ, அவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம்.

* பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ‘சி’ பிரிவு ஊழியர்கள் நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து ரொக்கமாக ரூ.10 ஆயிரம் முன் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

ஏ.டி.எம். மையங்களில் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில், எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் அரசும், ரிசர்வ் வங்கியும் தற்செயல் திட்டத்தின்கீழ் பணம் வினியோகிக்கின்றன.

ஏ.டி.எம். மையங்களில் ரூபாய் நோட்டுகள் கிடைக்கச்செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு, இது தொடர்பாக ஒரு உத்தேச திட்டத்தை தயாரித்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்கள், தொழில் நுட்பத்தில் படிப்படியாக மாற்றி அமைக்கப்படுகின்றன. அங்கெல்லாம் பணம் தட்டுப்பாடு என தகவல் வந்தால், உடனே பணம்
தற்போதைய மதிப்பீட்டின்படி, நாட்டில் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம். மையங்களில், ஒரு லட்சம் மையங்களில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளை வழங்க ஏற்ற வகையில் மாற்றி அமைக்கவே ஒரு வார காலம் ஆகும்.

100 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை அரசு அதிகப்படுத்துகிறதா என கேட்கிறீர்கள். செயல்திட்டம் வகுத்து, அதன்படி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களில் பணியாளர்கள் 3 ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். எனவே முழு உற்பத்தி திறனுடன் பணிகள் நடக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.