ப.சிதம்பரம் சதிகாரக் கூட்டத் தலைவன் என்று குறிப்பிட்ட எக்ஸ் ஜட்ஜூக்கு எக்ஸ்ட்ரா டூட்டி! – AanthaiReporter.Com

ப.சிதம்பரம் சதிகாரக் கூட்டத் தலைவன் என்று குறிப்பிட்ட எக்ஸ் ஜட்ஜூக்கு எக்ஸ்ட்ரா டூட்டி!

கடந்த வாரம் மோடி அரசு அதிகாரிகளால் சுவர் ஏறி குதித்து போய் அரெஸ்ட் செய்த ப.சிதம்பரத் துக்கு முன்ஜாமீன் மறுத்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிக்கு அவரது ஓய்வுக்குப் பின்னர் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது மீடியா வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆகி விட்டது. .

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், தீர்ப்பைத் தள்ளிவைத்துக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கில் அவசர அவசரமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சுனில் கவுர், ‘இதுபோன்ற கடுமையான பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கு முன்ஜாமீன் வழங்குதல் என்ற முறையையே சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற இதுதான் சரியான நேரம். இந்த வழக்கில் ப.சிதம்பரம் கிங்பின் (King pin) ஆகச் செயல்பட்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டு சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தார். அதாவது சதிக் கும்பலின் தலைவர் என்று பொருள் பட சொல்லியிருந்தார். முன்ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதற்கிடையே நீதிபதி சுனில் கவுர், ஆகஸ்ட் 23ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி மேல் முறை யீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அவரின் கீழ் நான்கு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

சுனில் கவுர்தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் விசாரிப்பதற்கு இருந்த முட்டுக்கட்டை களை உடைத்து தனது உத்தரவின் மூலம் வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதூல் பூரிக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முன்ஜாமீன் மறுத்து, கடந்த வாரம் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.