எனக்கு நேர்ந்த அவமானம் : ‘தர்பார்’ விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்!

எனக்கு நேர்ந்த அவமானம் : ‘தர்பார்’ விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ளது ‘தர்பார்’. அவருக்கு ஜோடியாக நயன்தாரா, இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சங்கர், இசையமைப்பாளர் அனிருத், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ் பேசிய போது, “நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் முருகதாஸ், நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் பெரிய ரசிகன் நான் என தெரிவித்துள்ளார். நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளது. எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவரின் சாயல் ரஜினிக்கு இருக்காது. ஆனால் ரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லண்டன் பூங்காவிற்கு என் பெயரை சூட்ட வேண்டும் அரசாங்கத்திடம் எல்லாம் பேசிவிட்டோம். நீங்க வந்து ரிப்பன் கட் பண்ணி வைக்கணும் அப்படீன்னு சொல்லி என்னை அழைச்சார். நான் சொன்னேன், இதிலெல்லாம் எனக்கு இஷ்டம் இல்லை. நாம உயிரோடு இருக்கும்போதே இந்த பார்க், ரோடு இதுக்கெல்லாம் நம்ம பேரை வைக்கக்கூடாது. அப்படி வெச்சா எனக்கு ஏதாவது ஆகிடும்னு சொன்னேன். அப்டியா அப்ப வேண்டாம்னு சொல்லிட்டார்.

அதே சுபாஷ்கரனுக்கு 2.0 படம் பண்ணும்போதே, நீங்க நமக்கு இன்னொரு படம் பண்ணனும் என்று கேட்டார். நான் சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் பண்ணுவதாக வாக்கு கொடுத்ததை சொன்னேன். அதன்பிறகு நாம படம் பண்ணலாம் என்று சொன்னேன். பேட்ட முடித்துவிட்டு எந்த டைரக்டரை வெச்சு பண்ணலாம் என்று யோசித்தபோது என் மைண்டில் வந்தது முருகதாஸ் சார் தான். ஒரு பெரிய புரொடக்‌ஷன் கம்பெனியை ஹேண்டில் செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. ரமணா படம் வந்தபோதே அதன் கருத்து, அந்த மேக்கிங், எடுத்த முறை, அதிலிருந்த தத்துவம் எல்லாம் ரொம்ப புடிச்சிருந்தது. அடுத்து கஜினி படம் பாத்ததும், கண்டிப்பா முருக தாஸோட ஒரு படம் செய்யணும் என்று சொல்லி அப்போதே அவரை சந்தித்தேன். அவரிடம் பேசியபோது, ‘நீங்கள் என்னை என் ரசிகர்களிடம் எப்படி காட்டப்போகிறீர்கள் என நான் பாக்கணும்’ என்று சொல்லியிருந்தேன். அப்போது நான் சிவாஜி படத்தில் இருந்தேன். அப்போது அவர் கஜினி படத்தை இந்தியில் எடுத்துக்கொண்டிருந்தார். நான் சிவாஜி படம் முடித்துவிட்டு பேசும்போது, அவருடைய கஜினி படம் முடியவில்லை. முடிய இன்னும் டைம் ஆகும் என்று சொல்லி, அவர் வைத்திருந்த கதையின் ஒன்லைன் சொன்னார். அது பிடித்திருந்தது, இதை வேலை செய்து கொடுக்க 6 மாசம் ஆகும் சார் என்று சொன்னார். சரி நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன்.

அப்போது ஷங்கர் சார் ரோபோ படத்தை நீங்கள் செய்யவேண்டும் என்று சொல்லி ஒரு ஆஃபரைக் கொண்டு வந்தார். அதில் முழுவதுமாக ஈடுபட வேண்டியதிருந்ததால், நான் முருகதாஸிடம் கேட்டேன். நீங்கள் அந்தப்படத்தை முதலில் முடியுங்கள் என்று சொன்னார் முருகதாஸ். அதன் பிறகு நான் சிங்கப்பூருக்கு சென்றுவந்து லிங்கா படம் நடித்தேன். அதன்பிறகு இனி நாம டூயட் எல்லாம் பண்ணவேண்டாம். கபாலி, காலா படம் எல்லாம் பண்ணேன். பேட்ட படத்துல என் கேரக்டரை கார்த்திக் சுப்பராஜ் சொன்னபோது, தம்பி நான் இப்ப அப்படியெல்லாம் பண்றது இல்லை என்று சொன்னேன். அவர் தான், நாங்க உங்களை 90களில் எப்படி பாத்தோமோ அப்படி பாக்க விரும்புறோம் என்று சொல்லி அந்த கேரக்டரில் நடிக்கவைத்தார். படம் ரிலீஸான மூன்றாவது நாளே முருகதாஸ் ஃபோன் போட்டு, சார் நீங்க இப்படி கேரக்டர் பண்ணுவீங்கன்னு முன்னாடியே சொல்லியிருந்தா நான் அப்பவே வேற ஸ்டோரி சொல்லியிருப்பேன்னு சொல்லி, ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்து தர்பார் கதையை சொன்னார். ரொம்ப ஜனரஞ்சகமா ஒரு கதையை எழுதியிருக்கார் முருகதாஸ். நான் 160 படங்களுக்கும் மேல பண்ணியிருந்தாலும் இந்தப் படம் மாதிரி ஒரு திரில்லர், சஸ்பென்ஸ் படம் நான் பண்ணதில்லை.

இந்த தர்பார் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடித்திருக்கிறேன். இயக்குனர் ஷங்கருக்கு பிறகு தனது படங்களில் சோசியல் மெசெஜ் சொல்லி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மும்பையில் கதை நடக்கிறது. சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார். இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது.

வரும் 12ம் தேதி முக்கியமான நாள். 69 வயதில் இருந்து 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். வரும் டிசம்பர் 12ம்தேதி எனது பிறந்த நாளை ஆடம்பரம்பாக கொண்டாடாதீர்கள். அன்று ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். நான் தமிழக அரசாங்கத்தை, விமர்சித்தாலும், அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் விழாவுக்கு இடம் கொடுத்ததற்காக அரசாங்கத்துக்கு மனமார்ந்த நன்றி.

அப்புறம் என் வாழ்வில் நடந்த, யாருக்கும் தெரியாத இரண்டு சம்பவங்களை இங்கு நான் பகிர்ந்துகொள்கிறேன். நான் முதல் முதல்ல தமிழ்நாட்டு மண்ணுல கால் வெச்ச சம்பவத்தை சொல்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி வேற மொழியில் படிச்சிட்டு, அடுத்ததா இங்கிலீஷ் மீடியத்துல போட்டதும் ரொம்ப கஷ்டப்பட்டேன். முதல்ல ஃபெயிலாயிட்டு, எப்படியோ கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணிட்டு நான் படிக்கலன்னு சொன்னப்ப, நம்ம குடும்பத்துல யாரும் படிக்கல; நீ படிக்கணும்னு சொல்லி ஒரு பணக்கார ஸ்கூல்ல கொண்டுபோய் சேர்த்துவிட்டார். அடுத்த எக்சாம் ஃபீஸ் கஷ்டப்பட்டு கடன் வாங்கி 120 ரூபாய் என் கைல கொடுத்தார். எழுதுனா கண்டிப்பா ஃபெயிலாகிடுவேன்னு எனக்குத் தெரியும். கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே, ஃபீஸ் கட்டாம பெங்களூர் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்தேன். அங்க இருந்த ஒரு டிரெயினைக் காட்டி எங்க போகுதுன்னு கேட்டேன். தமிழ்நாடு- மெட்ராஸ் போகுதுன்னு சொன்னாங்க. உடனே டிக்கெட் எடுத்துட்டு ஏறி படுத்துட்டேன். காலைல எழுந்து பாத்தா டிரெய்ன் மெட்ராஸ்-லே நிக்குது. இறங்கி ஸ்டேஷனுக்கு வரும்போது, டிக்கெட் செக் பண்றவங்க டிக்கெட் கேட்டாங்க. அப்பதான் பாக்கெட்ல கைவிட்டு பாத்தா டிக்கெட் இல்லை. டிக்கெட்டை தொலைச் சிட்டேன்னு சொன்னா நம்பாம, நீ டிக்கெட்டே எடுக்கலைன்னு சொன்னாங்க. நான் அழாத குறையா பேசுனதைப் பாத்து அங்க இருந்த கூலித் தொழிலாளர்கள் இந்த பையனை பாத்தா பொய் சொல்றா மாதிரி இல்லைன்னு சொல்லியும் கேக்கல. நான் என் பாக்கெட்ல இருந்த பணத்தை எடுத்து காட்டி, என்கிட்ட பணம் இருக்கு. நான் ஏன் டிக்கெட் எடுக்காம வரணும்னு கேட்டதுக்கு அப்பறம் தான் நம்பி அனுப்புனாங்க. அப்படித்தான் எனக்கு தமிழ்நாட்டுக்குள்ள எண்ட்ரி கிடைத்தது.

இப்ப வந்த இடத்துலே நல்ல நடிகன் ஒருவன் வந்தால் ரஜினி என பெயர் வைக்க வேண்டுமென பாலச்சந்தர் யோசித்து வைத்திருந்த ஒரு பெயரைத் தான் எனக்கு அவர் வைத்தார். இதயத்துக்கு நெருக்கமான அந்தப் பெயரை நல்ல நடிகன் ஒருவனுக்குத்தான் வைக்கவேண்டும் என்று வைத்திருந்தார். என் மீது நம்பிக்கை வைத்து, எனக்குக் கொடுத்த அந்தப் பெயரை நான் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன். என்னை ஹீரோவாக வைத்துப் படமெடுத்தால் படம் லாஸ் ஆகிடும். தெருவுல தான் வந்து நிக்கணும் என எத்தனையோ பேர் சொல்லியிருந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து கலைஞானம் எடுத்த படம் ஹிட் ஆனது. அவரது நம்பிக்கையும் வீண் போகல. 140 தயாரிப்பாளர்களுக்கும் மேலாக, என் மீது நம்பிக்கை வைத்து, ரஜினியை வைத்துப் படம் எடுத்தால் அது வெற்றிபெறும் என்று வைத்த நம்பிக்கை வீண் போகல. இதையெல்லாம் போல, நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண்போகாது.

அப்புறம் ஒரு விஷயம் நினைவுக்கு வருது.. 16 வயதினிலே திரைப்படம் மிக முக்கியமான படம். அதற்கு முன்பே சில படங்களில் நான் நடித்திருந்தாலும், 16 வயதினிலே தான் என்னை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்த திரைப்படம். அந்தப் படம் முடித்த சில நாட்களில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று கேட்டார். என்னிடம் கால்ஷீட் இருந்ததால் நான் சரியென்று சொல்லிவிட்டேன். சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் கேட்டேன். பிறகு அவர் குறைத்துப்பேச, நான் சரியென்று சொல்ல, அவர் மீண்டும் குறைக்க என்று 6000 ரூபாய் சம்பளத்தில் வந்து நின்றது. நான் சம்மதித்துவிட்டேன். டோக்கன் அட்வான்ஸ் மாதிரி 500 ரூபாய் கொடுங்க என்று கேட்டதும், ‘என்னிடம் இப்போது பணம் இல்லை. நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும், மேக்-அப் போடுவதற்கு முன்பாக பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்றார். நானும் சரியென்று, ஷூட்டிங் அன்று காத்திருந்தேன். கார் வந்ததும் அதில் ஏறி ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கு ஹீரோ வந்து மேக்-அப் போடுவதாக சொன்னார்கள். சரி, அதெல்லாம் இருக்கட்டும் என் பணத்தை எப்ப தருவீங்க என்று கேட்டேன். புரொடியூசர் வரட்டும் மேக்-அப் போடுங்க என்றார்கள். இல்லை பணம் கொடுத்தால் தான் மேக்-அப் போடுவேன் என்று கூறி நான் மறுத்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து ஒரு அம்பாசிடர் கார் ஒன்று வேகமாக வந்துநின்றது. அதில் வந்த தயாரிப்பாளர், ‘என்னடா பணம் தரலைன்னா மேக்-அப் போட மாட்டியா. நாலு படம் பண்ணியிருக்க. அதுக்குள்ள உனக்கு இவ்வளவு திமிரா என்று கேட்டு அங்கிருந்து வெளியேற்றினார். திரும்ப வருவதற்கு என்னிடம் காசு கூட இல்லை. அங்கிருந்து அப்படியே நடக்கத் தொடங்கினேன். வழியெல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘இது எப்படி இருக்கு?’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. பஸ்ஸில் சென்றவர்கள் முதல் நடந்து சென்றவர்கள் வரை ‘பரட்டை, இது எப்டி இருக்கு?’ என்று பேசிக்கொண்டு போவதை கவனித்தேன். அன்று முடிவு செய்தேன். இதே தமிழ்சினிமாவில் வெற்றி பெற்று, இதே ரோட்டுல ஒரு விலை உயர்ந்த காரை ஓட்டிக்கொண்டு வந்து கால் மீது கால் போட்டு உட்காரல என்று சொன்னால் நான் ரஜினிகாந்த் இல்லைடா’ என்று உறுதியெடுத்தேன்.

அதன்பிறகு இரண்டு வருடம் கழித்து, ஏ.வி.எம். செட்டியாரிடமிருந்து இத்தாலியன் ஃபியட் காரினை, நாலேகால் லட்சம் ரூபாய்க்கு லோன் போட்டு வாங்கி வீட்டில் நிறுத்த இடமில்லை. காருக்கு டிரைவர் யாராவது பார்க்கலாமா என்றார்கள். ஃபாரீன் காருக்கு ஃபாரீன் டிரைவர் தான் வேண்டும் என்று தேடத் தொடங்கினோம். ராபின்சன் என்ற பெயரில் ஆறு அடி உயரத்தில் ஒருவர் வந்தார். யூனிஃபார்ம், பெல்ட், ஷூ எல்லாம் போட சொல்லி வேலைல சேர்த்தேன். அடுத்த நாள் காலைல ஒரு எட்டு மணிக்கு, ‘ராபின்சன் ரிப்போர்ட்டிங் சார்’ அப்டின்னு வந்து நின்னார். ‘ஓகே லெட்ஸ் கோ’ என சொல்லி போகும்போது, ‘ஃப்ரண்ட் சீட் ஆர் பேக் சீட் சார்’ என ராபின்சன் கேட்டதும், அவர் கதவைத் திறந்துவிட ஏறி உக்காந்து ‘உட்றா வண்டியை ஏவிஎம் ஸ்டூடியோ வுக்கு’ன்னு சொல்லிப் போனேன். எந்த இடத்துல உன்னை நடிக்க வைக்கமுடியாது போடான்னு சொன்னாங்களோ, அதே இடத்துல வண்டியை நிறுத்தி; வண்டி மேல ஏறி உக்காந்து, 555 சிகரெட் ரெண்டு அடிச்சேன்.

நான் வந்ததைப் பாத்துட்டு யாரோ வந்திருக்காங்க போலன்னு எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தாங்க. ஒன்னுக்கு, ரெண்டு சிகரெட்டா புடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பி கவிதாலயாவுக்கு பாலச்சந்தர் ஐயாவை பாக்கப்போனேன். அவர்கிட்டபோய், ‘ஐயா கார் வாங்கியிருக்கேன். நீங்க தொட்டு ஆசிர்வாதம் பண்ணனும்’ எனக் கேட்டதும் வா போகலாம்னு கிளம்பி வந்தாங்க. வந்தவங்க காரை கொஞ்சம் தான் பாத்தாங்க. ராபின்சனை தான் பாத்தாங்க. அப்பறம் அவரை உக்கார வெச்சு வண்டியை ஓட்டிக்கிட்டு போனோம். இதை ஏன் சொல்றேன்னா… அந்த ரெண்டு வருஷத்துல நான் கார் வாங்குனதுக்குக் காரணம் என் உழைப்பு, புத்திசாலித்தனம்ன்னு சொன்னா அது தப்பாகிடும். அந்த நேரத்துல எனக்குக் கிடைச்ச ரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சரியான நேரத்துல எனக்கு கிடைச்சவங்க தான். பெரிய இடத்துக்குப் போறவங்க, என் உழைப்பால் மட்டும் இந்த இடத்துக்கு வந்தோம்னு சொன்னா அது உண்மையில்லை. எல்லாத்துக்கும் சரியான காலமும், நேரமும் அமையணும். அப்படி எல்லா நேரமும், காலமும் அமைந்து நல்ல நபர்களால் எடுக்கப் பட்ட படம். பொங்கல் அன்னைக்கு நல்ல நாள்ல ரிலீஸாகுது. எல்லாரும் தியேட்டர்ல படத்தைப் பாருங்க” என்ர சொல்லி முடித்த போது எழுந்த கரவொலி தர்பார் அரங்கை விட்டு அகல வெகு நேரமானது.

Related Posts

error: Content is protected !!