டப்பாவாலா – நம்ம சென்னையிலும் இருக்கிறாங்க தெரியுமா?

டப்பாவாலா – நம்ம சென்னையிலும் இருக்கிறாங்க தெரியுமா?

நம்ம இந்தியாவில் ‘டப்பாவாலா’ தொழில் ஆண்டுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருகிறது. அதிலும் மராட்டிய மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவே ‘டப்பாவாலா’ தொழில் உள்ளது. இதனால், தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்த, அது சம்பந்தமான வாசகங்களை ‘டப்பாவாலா’ பாத்திரங்களில் அச்சிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்பது தெரிந்த விஷயம்தாம்.

dubbawala july 13

இதுக்கிடையில் மும்பையில் பிரபலமான ‘டப்பாவாலா’ தொழில், சென்னையிலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்குதடையின்றி நடந்து வருகிறது. அதுவும் இந்த தொழிலை அண்ணா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 3–வது தலைமுறையாக சப்தமின்றி செய்து வருகின்றனர் என்பது தெரியுமா?. சென்னை அண்ணா நகரில் உள்ள சத்யா நகர் ஓ–பிளாக்கில் வசிக்கும் தம்பதி கணேசன் (வயது 68) – ராணி (63) ஆகியோர் இந்த ‘டப்பாவாலா’ தொழிலை 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றனர். இப்போது அவர்களுக்கு பக்கபலமாக அவரது 4 மகன்கள்–மருமகள்களும், 2 மகள்கள்–மருமகன்களும், பேரக்குழந்தைகளும் இருந்து இந்த தொழிலை தொய்வின்றி கவனித்து வருகின்றனர்.

அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சாப்பாட்டை வீடு தேடிச்சென்று சுடச்சுட எடுத்து வரும் இவர்கள், வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள ஒரு மரத்தடிக்கு ஒன்றாக கொண்டு வந்து வைக்கின்றனர். பின்னர், ஏரியா வாரியாக சாப்பாட்டு பாத்திரங்களை பிரித்து, அங்கிருந்து ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களில் புரசைவாக்கம், வேப்பேரி, அண்ணாசாலை, பாரிமுனை, பிராட்வே, சவுக்கார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இந்தப் பணியில் விறுவிறுப்பாக இருந்த ராணியிடம் பேச்சுக் கொடுத்த போது, “இந்த தொழிலை எனது மாமியார் மாணிக்கம்மாள் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினார். அப்போது, பெரம்பூர் சிம்சன் ஆலையில் வேலை செய்தவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு சென்று மதிய உணவை வாங்கிச் சென்று கொடுப்பார். அதற்கு காலணா, அரையணா கூலி கிடைத்தது.பின்னர், அவரது மகனை (கணேசன்) நான் திருமணம் செய்துகொண்ட பிறகு, தொழிலை விரிவுபடுத்தினோம். பின்னி மில் தொழிலாளர்களுக்கு, அவர்களது வீடுகளில் இருந்து சாப்பாட்டை பஸ்சில் எடுத்து சென்று கொடுப்போம். அதற்கு கூலியாக ஒவ்வொருவரிடமும் மாதம் ரூ.3 பணம் வாங்கினோம்.

இப்போது, எங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்த தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நாங்கள் சொந்தமாக 2 ஆட்டோ வைத்துள்ளோம். அந்த ஆட்டோ மூலமும், மோட்டார் சைக்கிள்களிலும் தினமும் சுமார் 300 பேருக்கு சாப்பாட்டை எடுத்துச் சென்று கொடுக்கிறோம். காலை 11.30 மணிக்கு குறிப்பிட்ட வீடுகளுக்கு செல்லும் நாங்கள், அங்கு தயாராக இருக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, வேப்பேரியில் மதியம் 1 மணிக்கு கூடுவோம்.

உடனடியாக ஏரியா வாரியாக சாப்பாடு பாத்திரங்களை பிரித்துக்கொண்டு, சற்று நேரத்திலேயே அங்கிருந்து பிரிந்து சென்றுவிடுவோம். மதியம் 2 மணிக்குள் உரியவர்களிடம் சாப்பாட்டை கொடுத்துவிடுவோம். பின்னர், மாலை 4 மணிக்கு காலி பாத்திரங்களை திரும்ப பெற்று உரியவர்கள் வீடுகளில் சென்று கொடுப்போம்.

பாத்திரங்களுக்கு என்று தனியாக நாங்கள் அடையாளம் வைத்துக்கொள்வது இல்லை. என்றாலும், எந்த பாத்திரம் எந்த வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டது என்பதை எளிதாக ஞாபகம் வைத்திருப்போம். சாப்பாட்டை எடுத்து சென்று வழங்குவதற்காக மாதக் கட்டணம் ரூ.300 வசூலிக்கிறோம். காலி சாப்பாடு பாத்திரத்தை திருப்பி எடுத்துச்சென்று வீட்டில் கொடுப்பதாக இருந்தால் ரூ.400 கட்டணம் வாங்குகிறோம். ஞாயிறு ஒரு நாள் மட்டும் எங்களுக்கு விடுமுறை” என்றார் அவர்.

error: Content is protected !!