ஏ.. தண்ணித் தொட்டி தேடி வரும் கண்ணுக் குட்டி – சுஜா புயல் சென்னையை நெருங்குது! – AanthaiReporter.Com

ஏ.. தண்ணித் தொட்டி தேடி வரும் கண்ணுக் குட்டி – சுஜா புயல் சென்னையை நெருங்குது!

தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், தண்ணீர் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாகுறை ஏற்பட்டது. தமிழக அரசாங்கம், பற்றாக்குறையைச் சமாளிக்க, விவசாய நிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரை டேங்கர்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்கிறது. ஆனால், நிலத்தடி நீரும் அதிக நாட்கள் நீடித்திருக்காது என்பதால் விவசாயிகள் ஆவேசமடைந்து அரசாங்கம் அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் வாதிட்டு வரும் சுழ்நிலையில் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது என்றும் கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் சரியாக சென்னை வழியாகத் தான் கடந்து செல்லும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்து நாடு வைத்துள்ள இந்த கஜா என்பதற்கு யானை என்று பொருள். இந்த மதம் பிடித்த யானைதான் தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறதாம்.

அண்மையில் வங்க கடலில் கஜா புயல் உருவான நிலையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று அது புயலாக மாறியது. இதற்கு கஜா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 14-ம் தேதி மாலையில் இருந்து வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.

புயல் கரையை நெருங்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதேபோன்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்திலும் மற்றும் கடலூர், புதுச்சேரி, நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: வடமேற்கு திசையை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரண்டு நாட்களில் தமிழகம் நோக்கி நகரும் இந்த புயல், 15-ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்”இவ்வாறு வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.