கியூபாவின் துணை அதிபராக இருக்கும் மிகுவெல் டயாஸ் கேனல் அதிபராகிறார் – AanthaiReporter.Com

கியூபாவின் துணை அதிபராக இருக்கும் மிகுவெல் டயாஸ் கேனல் அதிபராகிறார்

உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமை கொண்ட கியூபா அதிபர் காஸ்ட்ரோ வின் மறைவுக்கு பின அதிபராக இருந்து வந்த ரவுல் காஸ்ட்ரோ பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் துணை அதிபராக இருந்த மிகுவெல் டயாஸ் கேனல் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு பக்கத்தில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு கியூபா. இது கரீபியன் கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர அமெரிக்கா பல வழிமுறை களை கை யாண்டது. கியூபா மீது பொரு ளாதார தடை விதித்தது. கியூபாவின் முக்கிய ஆதார மாக இருந்த சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. கியூபாவுடனான வர்த்தகத்துக்கும் தடை கொண்டு வந்தது. கடந்த 1961-ம் ஆண்டு தூதரக உறவையும் முறித்துக் கொண்டது.

எனினும், சொந்த நாட்டின் வளங்களை மட்டுமே கொண்டு கியூபாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கே சேரும். அதற்காக கடந்த 49 ஆண்டுகளாக அமெரிக் காவின் 10 அதிபர்களை பகைத்துக் கொண்டே கியூபாவை வழி நடத்தினார். இதனால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 600-க்கும் மேற்பட்ட முறை முயற்சிகள் நடந்தன. அத்தனை முயற்சி களும் திறம்பட முறியடிக்கப்பட்டன. அமெரிக்காவின் பிடியில் இருந்து கியூபா விடுவிக்கப்பட்ட போது அதன் அதிபராக புல்ஜென்சியோ படிஸ்டா பொறுப்பேற்றார். அவரது சர்வாதிகார ஆட்சியால் மக்கள் கொதித்தெழுந்தனர். அவர்களை வழிநடத்தி வெற்றி பெற்ற வர்தான் ஃபிடல் காஸ்டரோ. அதன்பின், புரட்சி மூலம் 1959-ம் ஆண்டு படிஸ்டாவை விரட்டிவிட்டு கியூபாவின் ஆட்சி பொறுப்பை ஏற்றார் காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு வயது 32. லத்தீன் அமெரிக்காவின் இளம் தலைவர் அவர்தான்.

பதவிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்தினார். கடந்த 1960-களில் ஆப்பிரிக்காவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்களாக செயல்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட தனது படைகளை அனுப்பினார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதே நேரத்தில் வெளிநாடு களில் உள்ள ஏழை களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களையும் அனுப்பி வைத்தார். சோவியத் யூனியன் சிதைந்த பிறகு கியூபாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதன் பிறகு சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் கியூபாவின் பொருளாதாரம் மீண்டது.கடந்த 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை கியூபா அதிபராக இருந்தார். சுமார் 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார்.. தற்போது 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை அதிபரான மிகுவெல் டயாஸ் கேனல் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. எனவே, மிகுவெல் டயாஸ் கேனல் போட்டியின்றி அதிபராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 57 வயதான மிகுவெல் டயாஸ் கேனல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கியூபா நாட்டின் துணை அதிபராக பதவி வகித்து வருகிறார். இதன்மூலம் 1959 ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு பிறந்து கியூபா நாட்டின் அதிபராகும் முதல் நபர் மிகுவெல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியில் இருந்து விலகினாலும், அவரது கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர் பதவியினை தொடர்ந்து வகிப்பார் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதமூலம், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள மிகுவெல் டயாஸ் கேனல்-இன் நடவடிக்கைகள் ரவுல் காஸ்ட்ரோ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 40 ஆண்டுகளாக காஸ்ட்ரோ குடும்பத்தினர் அதிபராக இருந்த நிலையில், அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் அதிபர் பதவிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.