இந்தியாவில் உள்ள பணக்கார நகரங்களின் பட்டியல்! – AanthaiReporter.Com

இந்தியாவில் உள்ள பணக்கார நகரங்களின் பட்டியல்!

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தேர்வு செய்துள்ளது.அமெரிக்காவில் உள்ள “நவீன உலக சுகாதாரம்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள பணக்கார நகரங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

ind sep 30

ஒரு நகரில் வசிக்கும் தனி நபர்களின் பொறுப்பு நீங்கலான நிகர சொத்து மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்பட்டியலை அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி, இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பை விளங்குகிறது. பொருளாதாரத் தலைநகரான மும்பையில் 45 ஆயிரம் பேர் ரூ.10 லட்சத்துக்கு மேல் சொத்து மதிப்பு உடையவர்களாகவும், 28 பேர் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு உடையவர்களாகவும் இருக்கின்றனர். மும்பை நகரத்தின் மொத்த சொத்துமதிப்பு ரூ.54.12 லட்சம் கோடியாகும்.

மும்பைக்கு அடுத்தபடியாக பணக்கார நகரங்களின் பட்டியலில் டெல்லி இடம்பெற்றுள்ளது. இங்கு 22 ஆயிரம் பேர் ரூ.10 லட்சத்துக்கு மேல் சொத்து மதிப்பு உடையவர்களாகவும், 18 பேர் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு உடையவர்களாகவும் உள்ளனர். தில்லியின் மொத்த சொத்துமதிப்பு ரூ.29.70 லட்சம் கோடி.

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது. பெங்களூரில் 7,500 பேர் ரூ.10 லட்சத்துக்கு மேல் சொத்து மதிப்பு உடையவர்களாகவும், 8 பேர் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்துமதிப்பு கொண்டவர்காகவும் உள்ளனர். பெங்களூரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.21.12 லட்சம் கோடியாகும்.

பெங்களூரூவை அடுத்து இப்பட்டியலில் ஹைதராபாத் (சொத்துமதிப்பு- ரூ.20.46 லட்சம் கோடி), கொல்கத்தா (ரூ.19.14 லட்சம் கோடி), புணே (ரூ.11.88 லட்சம் கோடி), சென்னை (ரூ.9.90 லட்சம் கோடி) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மொத்த சொத்துமதிப்பு ரூ.3,696 லட்சம் கோடி என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.