ஒரு வருஷம் வரைக்கும் கெட்டுப் போகாத ஆப்பிள் அறிமுகம்! – AanthaiReporter.Com

ஒரு வருஷம் வரைக்கும் கெட்டுப் போகாத ஆப்பிள் அறிமுகம்!

தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையே ஏற்படாது என்று பலர் சொல்ல கேட்டிருக்கலாம். ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது. இப்பொழுது ‘fuji apple’ கூட கிடைக்கிறது. பல நிறங்களில் கிடைத்தா லும் பலன் என்னவோ ஓன்றுதான். ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. இந்நிலையில் ஓராண்டிற்கு கெடாமல் இருக்க கூடிய வகையில் புதிய ரக ஆப்பிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரகத்திற்கு காஸ்மிக் கிரிஸ்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பறித்தது முதல் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று ஆராயாச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய ரக ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆப்பிளானது ஹனிகிரிஸ்ப் + எண்டர்ப்ரைஸ் ஆகியவற்றின் கலப்பினம். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

ஹனிகிரிஸ்ப் ரகமானது நல்ல இனிப்பு சுவை மிக்கது. அது போல எண்டர்ப்ரைஸ் ரகமானது நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இவற்றின் கலவையாகவே தற்போது இந்த புதிய ரக ஆப்பிள் உள்ளது. திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடு வதற்கு இந்திய மதிப்பில் சுமார் 72 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது.

குறுக்கு மகரந்த சேர்க்கை மற்றும் தரம், சுவை உள்ளிட்ட பலகட்ட சோதனைகளுக்கு பிறகு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த ரக ஆப்பிளின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை பிரதிபலிப்பதால், காஸ்மிக் கிரிஸ்ப் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்.