காப்பகங்களில் உள்ள குழந்தைகளில் 50% கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்!

காப்பகங்களில் உள்ள குழந்தைகளில் 50% கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்!

பெற்றோர் இல்லாமல் தவிக்கும் பல குழந்தைகள் காப்பகங்கள் கருணை இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஏதேதோ காரணங்களால் பெற்றோரை இழந்தும், பெற்றோர் இல்லாமல் கைவிடப் பட்ட குழந்தைகளை கண்டு அறிந்து அவர்களை பாதுகாக்க தமிழகத்தில் மாவட்டந்தோறும் காப்பகங்கள் உள்ளது. அவர்களை தாங்கள் சொந்த குழந்தையாக நினைத்து வளர்க்க குழந்தை யில்லாத பல தம்பதிகள் பலரும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.ஆனால் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை யாரும் முன் வந்து தத்தெடுப்பதில்லை.இந்நிலையில் ஏறத்தாழ 50 விழுக்காடு குழந்தைகள் காப்பகங்களில் நிர்பந்தப்படுத்தக்கூடிய மற்றும் உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை படிக்கையில் சிறு குழந்தைகள் மீது வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது உள்ளிட்ட எண்ணற்ற தகவல்கள் கொஞ்சம் அதிகமாக  கண்களில் படுகின்றன. அந்த வகையில் இந்தியாவிலுள்ள சுமார் 9,500 குழந்தைகள் காப்பகங்களில் பாதிக்கும் மேலானவற்றில் குழந்தைகள் உடல்ரீதியாக தாக்கப்படுவது, அங்கு குழந்தைகளின் விடுதலைக்கு ஏராளமான தடை விதிப்பது, உணவு வழங்காமல் தண்டிப்பது, கடுமையான வார்த்தைகளால் திட்டுவது, குழந்தைகளை மிரட்டுவது போன்ற கொடுமைகள் நடைபெறுவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

நம் நாட்டில் உள்ள குழந்தை காப்பகங்கள் குறித்த பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2016-17ஆம் ஆண்டில் ஆய்வை மேற்கொண்டது. எனினும் இக்குழுவின் அறிக்கை தற்போதுதான் வெளியாகியுள்ளது.

சுமார் 4,310 குழந்தை காப்பகங்கள் சட்டவிரோதமாகக் குழந்தைகளைத் தண்டிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. பல சமயங்களில் உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதும், குழந்தைகள் அவமானப்படுத்தப்படுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கையில், “ஏறத்தாழ அனைத்து குழந்தை காப்பகங்களிலும் எதிர்மறையான, சட்டவிரோதமான வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும், விசாரணையை மேம்படுத்தும்படி சில அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை அமைச்சரான மேனகா காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

error: Content is protected !!