காங்கிரஸ் தலைவர்: ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு! – AanthaiReporter.Com

காங்கிரஸ் தலைவர்: ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் 16-ந் தேதி சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்கிறார். சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார். ராகுல் காந்தி தலைவராக பதவி ஏற்றதும் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.