காங்கிரஸ் என்னும் பேரியக்கம் – நேற்று + இன்று + நாளை! – AanthaiReporter.Com

காங்கிரஸ் என்னும் பேரியக்கம் – நேற்று + இன்று + நாளை!

மூன்றாவது முறையும் மாநிலத்தில் ஆட்சி பிடிக்க முடியாமல் போன ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே குஜராத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொறுமை இழந்து சிலர் எதிர் கட்சிக்குத் தாவி உள்ளனர். இதுவரை காங்கிரஸ் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் அவர்களே தங்களின் உறுப்பினர்களை கூவத்தூர் ஸ்டைலில் ராஜ்ய சபா எலக்‌ஷன் வரை அடைகாக்க பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். ஏன் காங்கிரஸுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம்…

எங்கோ தென்னாப்ரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு கூட்டுக் குழு இந்தியா அடிமை விமோசனம் பெற காங்கிரஸ் எனும் பெயரை வைத்தனர். (காங்கிரஸ் என்றால் குழு எனப் பொருள்).பின்னர் கடல் தாண்டி வந்த அந்தக் குழு, காந்தியால் முன்னிறுத்தப் பட்டு, நேரு, படேல், ஆசாத், ஜின்னா, சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் போன்றவர்களால் ஒருமித்து வழி நடத்தப்பட்டு, நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது வரலாறு…..சுதந்திர இந்தியாவை ஆண்டது ஒரே கட்சி… காங்கிரஸ். எந்த பெரிய எதிர்ப்பும் இல்லாமல். கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி (கேரளா, மே.வங்கம் விதிவிலக்கு)

சீனாவிடம் தோற்ற போதும் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழக்கவில்லை. கம்யூ. காங்கிரஸ் கையாலாகாத கட்சி என வர்ணித்த போதும் மக்கள் காங்கிரஸைத் தவிர யாருக்கும் ஓட்டு போடவில்லை. காமராஜ், காங்கிரஸை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் வினையாக, இந்திராகாந்தியை காங் தலைவராக நியமித்து, பின்னர் அவராலேயே அவமானப் படுத்தப் பட்டார். அன்றே காங்கிரஸ் பிரிந்தது. காமராஜின் ஸ்தாபன (ஸ்தாபன என்றால் ஒரிஜினல்) காங்கிரஸ் சிண்டிகேட் காங்கிரஸ் எனப்பட்டது. எதிர்த்து நின்ற இந்திரா இண்டிகேட் (என்ன எழவு அர்த்தமோ இன்னிவரை எனக்குத் தெரியாது) காங்கிரஸ் தலைவராகி வெற்றியும் பெற்று பிரதமரானார்.

நேருவின் மகள் எனும் அந்தஸ்தும், தாகூரின் சாந்திநிகேதன் பள்ளியிலும், லண்டனில் பட்டப் படிப்பும் அவரது நுனி நாக்கு ஆங்கிலப் புலமையும் அவரை மக்கள் மனதில் எட்டாத உயரத்துக்குக் கொண்டு போனது என்னவோ நிஜம். ஆனால் அதன் பின் இந்தியாதான் இந்திரா, இந்திரா தான் இந்தியா என யாரோ சொன்ன மாயைப் பொய்க்கு மதிமயங்கிப் போனார். போதாததிற்கு பங்களாதேஷ் மீட்பு, பாக். எதிரான வெற்றி என அனைத்தும் அவருக்கு போதையைக் கொடுக்க, எதேச்சையதிகாரியாக 1975ல் மாறி, எமர்ஜென்சி கொண்டு வந்தார். பலரை சிறையில் அடைத்து அவர்களின் கட்சி வளர மறைமுகமாக உதவினார். வாஜ்பாய் இயங்கிய ஜன்சங் போன்ற கட்சிகள் பெரும் வெளிச்சத்துக்கு வந்தது அந்த காலகட்டமே.

அலகாபாத் நீதிமன்றம் எமர்ஜென்சியை இரத்து செய்து இந்திரா அரசை டிஸ்மிஸ் செய்து காங்கிரசை மண்ணோடு மண்ணாக புதைத்தது. ஆனாலும் இரண்டே வருடங்களில் ஃபீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுந்த இந்திரா, 1980இல் ஆட்சியைப் பிடித்தார்.ஆனால் ப்ளூஸ்டார் ஆபரேஷன் நடத்தி 1984 அக் 31 இல் உயிரிழந்தார்.இந்திராவின் சிதை மூட்டப்படும் முன்னமேயே அப்போதைய எம்பி, மற்றும் மகன் ராஜிவ் பிரதமராக்கப்பட்டார்.

ராஜிவ் நிரம்ப திறமைசாலி இல்லை என்றாலும், ஓரளவு கட்டுக் கோப்புடன் ஆட்சியையும் கட்சியையும் நடத்திச் சென்றார். அவரது காலத்தில் காங் கட்சிக்கு பெரும் பின்னடைவு போஃபார்ஸ் ஊழல். மற்றொரு வேண்டாத நடவடிக்கை ஐபிகேஎஃப் 1989 ல் இலங்கை சென்று தமிழர்களின் மனதைப் புண் படுத்தியது.மே21,_1991ல் ராஜிவ் இறக்க, நரசிம்மராவ் பிரதமராகி, இன்று வரை பிரச்சனை தீராத பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு விதத்தில் காரணமாகிப் போனார். கூடவே உ.பி. முதல்வர் பாஜகவின் கல்யாண்சிங் கரசேவைக் காரர்களை தடுக்காமல் மசூதியை இடிக்கட்டும் என ஊதிவிட்டு சும்மா இருந்து விட்டார்.

நரசிம்ம ராவிற்குப் பின் வலுவற்ற ஜனதா தள் ஆட்சி அமைத்தது. காங்கிரசுக்கு மாற்றாக எந்த ஒரு கட்சியும் உதித்து எழவில்லை என்பதால், கூட்டணிக் கட்சியான வாஜ்பேயியின் பாஜக 13 மாதங்களில் சிதைந்தது. ஆனால்  1999 முதல் 2004 வரை பாஜக எனும் கட்சி சரித்திரத்தில் முதன் முறையாக ஐந்தாண்டு காலம் ஒரு முழுமையான ஆட்சியை இந்தியா கண்டது. அதற்கு முன் நடந்த வி பி சிங், சந்திரசேகர், தேவே கவுடா போன்றோரின் ஆட்சிகள் குறைப் பிரசவமாகப் போனது.

2004ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், தன் பிரபலத்திற்க்கேற்ற வாரிசு நேரு பரம்பரையில் இல்லாததாலும், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சோனியாகாந்தியை நிராகரிப்பார் எனும் அனுமானத்தினாலும், அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் பழக்கப் படாத இந்திய ஆட்சிப் பணியாளரும், தேசிய திட்டக் குழுத்தலைவருமான மன்மோகன் பிரதமராக்கப் பட்டார்.காங்கிரஸ் கட்சியை இந்திராவிற்குப் பின் யாரும் வளர்க்க முற்படவில்லை. ஆட்சியைப் பிடிப்பதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவீதம் கூட கட்சியை வளர்க்க யாரும் முன் வரவில்லை. மத்தியில் மாபெரும் வெற்றிகள் பெற்றாலும், தொண்டன் என கொடி பிடிக்க காசு கொடுத்தே கூடி வரப்பட்டான்.

நேரு குடும்பத்தின் பலமான நம்பிக்கை, தங்கள் குடும்பமே இந்தியாவை தொடர்ந்து ஆளும் எனும் ஆணித்தரமான உறுதியே அவர்களின் நலிவிற்கு காரணம்.காங்கிரஸில் சேர்ந்தவர்கள் எல்லாம், ராஜ பரம்பரை, மேட்டுக்கு குடிகள், படித்த பணக்காரன், வக்கீல்கள் போன்றோர். தங்கள் சுய லாபத்திற்காக கட்சியில் சேர்ந்தார்கள் தவிர கட்சியை வளர்க்க அல்ல. பணமும் பவரும் இருந்தால் கட்சி தானாக வளரும் என அவர்களே எண்ணிக்கொண்டார்கள்.

சாமானிய மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள முடியாத மேட்டுக்குடி பெருமக்களே மந்திரிகளாகவும் கட்சிப் பிரதிநிதிகளாகவும் இருந்து வந்தனர். வெற்றி வாய்ப்புகளை மக்களோடு மக்களாக உடனிருந்து அறிந்து கொள்ளாமல், கருத்துக் கணிப்புகளை மட்டுமே நம்பி களம் இறங்கினர்.எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் உட்பூசல் அடிதடி வழியாக வெளிப்படையாக தெரிந்தது.பல கூட்டங்களில் வேட்டி உருவப்பட்டும், சட்டை கிழிபட்டும் அடி பட்டும் ரணகளமாகியது. எந்த இரு தலைவரும் ஒத்துப் போகாமல் டெல்லிக்கு பஞ்சாயத்துக்கே சென்றார்கள்.

இரு சாராரையும் முறைத்துக் கொள்ள விரும்பாத கட்சி அவர்களை சமாதானப் படுத்த முடியாமல்,புதிய ஒருவரை அதிரடியாக நியமித்து ஏனையோரை வெறுப்பற்றினார்கள்.இதனால் தலைவர்களின் இடையே இன்னும் அதிகமான போட்டியும் மனக்கசப்பையுமே தந்தது. இடையே, மாநிலங்களில் கூட்டணி என்ற பெயரில் மக்கள் விரோதக் கட்சிகளிடம் கூட்டணி வைத்து தன் பலத்தை குறைத்துக் கொண்டது. கூட்டணி தர்மம் என்ற பெயரில் அராஜ கங்களையும் ஊழல்களையும் கண்டுகொள்ளவில்லை. சொல்லப் போனால் ஊழல்களில் தன்னையும் பங்காளியாக காங்கிரஸ் இணைத்துக் கொண்டது. இதன் இடையில் புதியதாக ஒரு எதிரி குஜராத்தில் முளைப்பதையும், அது உரம் போட்டு வளர்க்கப் படுவதையும் சாதாரணமாக எண்ணி விட்டது காங்கிரஸ்.

டீக்கடைக்காரன் என இளக்காரமாக பேசுவது ஏழை மக்களினிடையில் எதிர் வினையாற்றும் என்பதை மேட்டுக்குடி காங்கிரசார் மறந்து போயினர்.2004க்கு பிறகு காங்கிரஸின் புது இரத்தம் என மக்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட அடுத்த தலைமுறை நேரு குடும்ப ராகுல் காந்தி.ஆணவம், மற்றும் அடக்கம் அற்றவராக கட்சிக்குள் வலம் வந்தார். தன் சொல்லே பிரதானம் என அவரே முடிவெடுத்துக் கொண்டார். போதிய அரசியல் அறிவின்மை, தெளிவின்மை, நிர்வாகத் திறமையின்மை, கட்சியை தவறான பல முடிவுகளை எடுக்க வைத்தது. முக்கியமாக, வியூகங்கள் அற்ற போராட்டத்திடையே காங்.சந்தித்தது.

இடையே, அசைக்க முடியாது என டெல்லி காங். ஆட்சியை இரண்டே வயது முடிந்த கெஜ்ரிவாலால் வெற்றிக் கனியை பறிக்க முடிந்த்து.அப்போதும் எந்தவித நியாய, தர்க்கமில்லாத வகையில் கெஜ்ரிக்கு ஆதரவு தந்து, பின்னே பின்வாங்கி, மறு தேர்தலில் அவர் பெரும்பான்மை பெற வழி வகுத்து தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டது காங்கிரஸ். கட்சியிலும் ஆட்சியிலும் மகள் மருமகன் நுழைந்து பல ஊழல்களில் திளைக்க அனுமதித்ததும் காங் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். கூடவே உறவுக்கார கொட்ரோச்சியை போஃபார்ஸ் ஊழல் லிஸ்டில் இருந்து விடுவித்ததும். இதனுடன் கூடவே தமிழர்களின் வெறுப்புணர்வை இலங்கைத் தமிழர் விஷயத்தில் கொசுறாக பெற்றுக் கொண்டது.

குறிப்பாக பிரபாகரனைக் கொல்வதில் அதீத அக்கறை காட்டியது மட்டுமன்றி, தமிழன் மனதில் ஆறாத ரணமாகிப் போன இலங்கைத் தமிழரின் இனப் படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டதை தமிழன் இன் ஆயிரம் வருடங்கள் நினைவில் வைத்து காங். கழுத்தை அறுப்பான். இன்றளவும் தமிழ்நாட்டில் நொண்டிக் கொண்டு கூட ஓட முடியாத பணக்கார கிழட்டுக் குதிரை காங்கிரஸ். யார் மீதாவது எல்லா மாநிலத்திலும் தொற்றிக் கொண்டு செல்வதே காங். ஸுக்கு பழகி விட்டது. எல்லா மாநிலங்களிலும் புதிய தலைவரின் முதல் பேட்டி அவர் எப்படி கட்சியை வளர்க்கப் போகிறார் என்பதே. அனால் அந்த நிமிடம் முதல் உட்கட்சிப் பூசலில் தன்னை இணைத்துக் கொண்டு மேலிடத்து தலைவர்கள் வருகையின்போது மட்டும் ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள்.

முடிவுரை:

எதற்காகவோ தொடங்கப்பட்ட ஒரு கட்சி எதை எதையோ செய்து எங்கோ கண்காணா தூரத்தில் சென்று மறையும் நிகழ்வை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.ராகுல், சோனியா போன்ற முதிர்ச்சியற்ற தலைமையின் கீழ் காங்கிரஸ் இயங்கினால், நாளை சரித்திர ஏடுகளில் மட்டுமே காங்கிரஸைத் தேட வேண்டும். சாமானியனாகிய என்னால் காங்கிரஸ் எனும் பாரம்பரிய மன்னராட்சிக் கட்சிக்கு கூற முடிந்த அறிவுரை.

1. சோனியா தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அவர் நேரு பரம்பரையைச் சேர்ந்தவரல்ல என்பதை காங்கிரஸாரே ஏற்பதில்லை. அப்படி ஏற்றவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

2. 44 வயது கடந்த ராகுலுக்கு இன்னும் நிறைய வயது இருக்கிறது. நேரு பரம்பரை எனும் பட்ட பெயரை இறக்கி வைத்து விட்டு, இந்திய அரசியல் அறிவினையும், ஏழ்மை பற்றியும் , தனது பிடிவாதம், அரசியல் நுண்மை குறைகளையும் நேர்மையாக ஒத்துக்கொண்டு புதிய ஆளாக காலத்தில் இறங்க வேண்டும்.

3. எதிர்க்கட்சிகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை அறிந்து தன தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

4. மேட்டுக்குடி தலைவர்களை புறம்தள்ளி, கட்சிக்கு நேர்மையான இளம் தலைமுறையினரை பதவிக்கு அமர்த்த வேண்டும்.

5. மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாடும் மத்திக்கு ஒரு நிலைப்பாடும் இருக்கக் கூடாது. மாநில மக்களின் மனதை புண்படும் நோக்கில் செயல்பாடுகள் இருக்கக் கூடாது.

6. பலம் பலவீனங்களை பாரபட்சமின்றி தெரிந்து கொண்டு, அதனை சீர் செய்ய நேர்மையாக முயலவேண்டும்.

7. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆட்சியாளர்களை நேர்கொள்ள வேண்டும். மக்களின் மனநிலை அறிந்து கூட்டணி வைக்க வேண்டும். நன்றிக்கு கடனுக்காக கூட்டணி வைக்கக் கூடாது.

8. ஊழலில் ஈடுபட்ட எவரையும் தாங்கிப் பிடிக்காமல் வெளியேற்ற வேண்டும்.

9. கட்சியில் அடிமட்டத் தொண்டனின் பங்களிப்பு அன்பளிப்பு மூலமாக இல்லாமல், உளமார்ந்த பங்களிப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைச் செய்யவில்லை என்றால், காங்கிரஸ் எனும் பாரம்பரியமிக்க கட்சி டீக்காரர்களிடம் மீண்டும் மீண்டும் தோற்கும். நம் வாழ்நாளிலேயே கட்சியின் வீழ்ச்சியை சரித்திரத்தில் எழுதப் படுத்துவதை நாமே காண்போம்….

– டிமிட்த் பெட்கோவ்ஸ்கி.