வாக்களிக்காவிட்டால் அபராதம் & டிரைவர் லைசென்ஸ் ரத்து -ஆஸ்திரேலியா அதிரடி! – AanthaiReporter.Com

வாக்களிக்காவிட்டால் அபராதம் & டிரைவர் லைசென்ஸ் ரத்து -ஆஸ்திரேலியா அதிரடி!

நம் நாட்டில் கடந்த பார்லிமென்ட் தேர்தலைக் காட்டிலும், வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்து உள்ளது. அதிலும் இம்முறை 100 சதவிகிதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல் பட்ட நிலையிலும், கடந்த தேர்தலைக்காட்டிலும் வாக்குப்பதிவு குறைவாகப் பதிவாகி வருவது, பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும் அதை அரசு ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதே சமயம் வாக்காளர்கள் தேர்தலில் தங்களது வாக்கை செலுத்த தவறினால் அபராதம் மற்றும் ஓட்டு நர் உரிமம் ரத்து செய்யபடும் என்ற ஆஸ்திரேலியா அரசின் சட்டம் அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நம் இந்தியத் தேர்தல் முறையை உற்றுப் பார்த்தால் வியப்பும் ஆச்சரியமும் மேலிடும். இங்கு ஆறு தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள், 173 தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப் படாத கட்சிகள். கிட்டத்தட்ட 67 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், 7 லட்சம் வாக்குச் சாவடிகள், 35 லட்சம் தேர்தல் பணி அலுவலர்கள், 11 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 5 லட்சம் பாதுகாப்பு காவலர்கள். உலகில் எங்கும் இல்லலத அளவிலான புள்ளிவிவரங்கள் இவை. உலகத் தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச் சாவடியும் பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச் சாவடியும் இந்தியா வில்தான் இருக்கின்றன. அத்துடன் நாடாளுமன்றத்துக்கு 20 லட்சத்துக்கு மேல் வாக்காளர்களும், சட்டமன்றத்துக்கு 2 லட்சத்துக்கும் மேல் வாக்காளர்களும் அடங்கிய தொகுதிகள் இங்குள்ளன.

அதே சமயம் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்துக்கு 50 ஆயிரத்திலிருந்து 4 லட்சம் என்றும், சட்டமன்றத்துக்கு 40 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வாக்காளர்களும் அடங்கிய தொகுதிகள் தான் உள்ளன. இப்படிப்பட்ட சிக்கலான நிலைமையில் ஆஸ்திரேலிய நாட்டில் பொதுமக்கள், தேர்தல்களில் வாக்களிகாமல் இருப்பதை தடுக்கும் வகையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன்படி அந்நாட்டு தேர்தல்களில் வாக்களிக்க தவறுபவர்கள் தகுந்த காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால் அவர்களுக்கு முதற்கட்டமாக 1400 ரூபாயும், தாமதமாக கட்டுபவர்களுக்கு 12000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஏற்கெனவே கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் இருந்த நாடுகளான ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்த்திரியா, வெனிசுலா, சிலி, பிஜி தீவுகள் போன்ற நாடுகள் கட்டாய வாக்களிக்கும் நடை முறையினை திரும்பப் பெற்றுவிட்டன. இதனிடையேதான் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாநில அரசுக்கான தேர்தலில், வாக்களிக்க தவறுபவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் அணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை எனக்கூறி டார்வின் பென்சினர் என்பவர் 21 ஆயிரம் ரூபாய் அபராதமாக கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாதிரியான சட்டங்களை இந்தியா போன்ற பிற நாடுகளிலும் விதிக்கப்படவேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில், நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் இந்திய தலைநகர் டெல்லியில் 60% சதவிகித வாக்கு மட்டுமே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.