தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் – பினராயி விஜயன் மன்னிப்பு – AanthaiReporter.Com

தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் – பினராயி விஜயன் மன்னிப்பு

நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொல்லம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போது செயற்கை சுவாச கருவி இல்லை என்று கூறி சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இதே போல சில தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் சென்ற போதும் முருகனை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அலைக்கழித்ததால் ஆம்புலன்சிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதைதொடர்ந்து இந்த தகவல் முருகனின் புகைபடத்துடன் சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி  கேரள மனித உரிமை கமி‌ஷனும் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்பட 5 ஆஸ்பத்திரிகள் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் விளக்கமளித்து பேசினார். “உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் முருகன் என்ற தொழிலாளி மரணம் அடைந்தார் என்ற தகவல் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. சிகிச்சையளிக்க மறுத்த அனைத்து மருத்துவமனைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவுக்கே அவமானகரமான இந்த சம்பவத்திற்காக முருகனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.