சினிமா பாணியில் தேடப்படும் குற்றவாளிகளை கூண்டோடு பிடித்த சென்னை போலீஸ்! – AanthaiReporter.Com

சினிமா பாணியில் தேடப்படும் குற்றவாளிகளை கூண்டோடு பிடித்த சென்னை போலீஸ்!

கடந்த நாலைந்து ஆண்டுகளில் நம் நாட்டில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களின் எண்ணிக்கை சற்றேறகுறைய இருபதாயிரம் இருக்கும. இதில் சென்னையில் வசிப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர்கள் இருக்கலாம். மீதியுள்ள ஆறாயிரம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதை யொட்டி இந்தச் சென்னையை சேர்ந்த குற்றவாளிகள் எங்கு வசிக்கிறார்களோ? அதன் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பெயர்ப்பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் அதன் எல்லையில் வசிக்கும் குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த போலீஸ் நிலையங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் சென்னையில் உள்ள 127 போலீஸ் நிலையங்களிலும் அந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வசிக்கும் குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல் முழுவதுமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் ரோந்து செல்லும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோந்து செல்லும் போலீசார் அவர்கள் எல்லையில் வசிக்கும் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரடியாக சந்தித்து கவுன்சிலிங் முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.. ஆனாலும் நம் சென்னை போலீஸ் ரிக்கார்ட்படி தேடப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை மினிமம் நாலாயிரம் இருக்கும் என்று போலீஸ் அதிகாரி நம்மிட்ம் சொன்னார். இந்நிலையில்தான் சென்னையில் நேற்றிரவு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சென்னை போலீஸ் வரலாற்றில் இது போன்ற மெகா ரவுடிகள் வேட்டை நடந்ததில்லை எனவும் சினிமாவை மிஞ்சும் அனைத்துக் காட்சிகளும் நேற்று மாலை முதல் நடந்துள்ளது என்றும் எல்லா மீடியாக்களிலும் கொட்டை எழுத்துகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

பல்வேறு ஓல்ட் சினிமா படங்களில் வில்லனாகப்பட்ட உலகின் முக்கிய கடத்தல் புள்ளிகள், ரவுடிகள், தாதாக்கள் ஒன்று கூடுவார்கள். அவர்களைப் பிடிக்க நாயகன் வேஷமிட்டு அவர்கள் ஸ்பாட்டுள் போய் ஆடிப் பாடுவார். அதன் பின்னர் சினிமா உலகின் திரைக்கதை வளர்ச்சி அடைந்து விட்டதால் சென்னையின் பிரபல தாதாக்களை குறிப்பிடுவது போல் படக்காட்சிகள் எடுக்கப்பட்டது. பழைய சினிமாவில் வரும் வரி வரி பனியன், கோட்டு சூட்டு போட்டு ‘எஸ் பாஸ்’ போன்ற காட்சி அமைப்புகள் மாறி யதார்தத்துக்கு வந்தது. ரவுடிகள் சென்னை தமிழ், தூத்துக்குடி பாஷை பேச ஆரம்பித்தார்கள். சினிமாவில் மட்டுமே தாதாவும் அவர்களுக்கு அடியாட்களாக ரவுடிகளும் இருப்பார்கள். அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்கள். ஆனால் நேற்று நம்ம சென்னை போலீஸ் கண்டதை விவரித்தப் போது, அப்படியே சினிமா மாதிரியே இருந்துச்சு என்கிறார்கள்.

அதாவது சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று மாலை ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தாம்பரத்தில் இருந்து அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தேடப்படும் குற்றவாளியான மதன் (எ) பல்லு மதன் என தெரிய வந்தது. அவனிடம் பயங்கர ஆயுதங்களும் இருந்தன. மதனிடம் போலீஸ் தன் ஸ்டைலில் நடத்திய விசாரணையில் பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் நடக்கும் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறியுள்ளான். அவர்கள் குறிப்பிட்டவன் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பினு பிரபல தாதா ஆவார். சென்னையின் முக்கிய விஐபியின் பலத்தில் போலீஸார் நெருங்க முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தவர். பல குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பினுவின் கீழ் பெரிய ரவுடிகள் பட்டாளமே உள்ளது. ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக பினு அறிவிக்கப்பட்டுள்ளான்.

இதையடுத்து ரவுடிகள் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் பிடிபட்ட பல்லு மதனை காவல் ஆய்வாளர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். கூடவே தாதா பினு நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் அங்கு ஒன்று கூடுவதையும் அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சர்வேஸ்ராஜ் மேலதிகாரி இணை ஆணையர் சந்தோஷ்குமாருக்கு அளித்த தகவலை அடுத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு ரவுடிகள் ஒன்று கூடும் திட்டம் கொண்டு செல்லப்பட்டது.

ஆணையர் உத்தரவுப்படி ரகசிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. மாங்காடு, குன்றத்தூர், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை உஷார்படுத்தப்பட்டு 60-க்கும் மேற்பட்ட போலீஸார் வாடகை வாகனங்களில் மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்தனர். ஒரே இடத்தில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்ட காவலர்கள், பண்ணை வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். இதனை கண்ட 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓட முயன்ற 72 ரவுடிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் பிடித்தனர். பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரவுடிகள் பயன்படுத்திய அங்கிருந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கிய ரவுடிகளிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சிக்கிய பலரும் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஆவர்.72 ரவுடிகள் கைதான சம்பவத்தில் 10 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரவுடிகளில் மாதவரத்தைச் சேர்ந்த போலி வழக்கறிஞர் சரவணனும் ஒருவர்.

கல்லூரி மாணவர்கள் உள்பட 72 பேரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் கூறியுள்ளார். 72-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், மற்றும் ரவுடிகள் ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வழக்கம் போல் போலீஸார் சுற்றி வளைத்ததில் முக்கிய குற்றவாளியான தாதா பினு உள்ளிட்ட முக்கிய கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீஸார் ரவுடிகளை கைது செய்து அவர்கள் செல்போனை ஆய்வு செய்ததில் தாதா பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டப் படம் சிக்கியது. அதில் தாதா பினு அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடுவதும், உடன் முக்கிய ரவுடிகள் இருப்பதும் பதிவாகியுள்ளதுதான் ஹை லைட்.

தற்போது பல காவல் நிலையங்களில் தேடப்பட்டு வரும் அனைத்து ரவுடிகளும் ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் போது அதிரடியாக சினிமா பாணியில் போலீஸார் கைது செய்திருப்பதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இந்த ரவுடிகள்  கண்காணிப்பு தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் விருது வழங்கி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் போலீஸாரின் இந்த செயலை வெகுவாகப் பாராட்டியுள்ளார். கையும் களவுமாக ரவுடிகளை கைது செய்தது குறித்து பாராட்டி பதிவு செய்துள்ள விஷால் காவல் ஆணையர் மற்றும் திறம்பட திட்டம் வகுத்து அனைவரையும் வளைத்துப் பிடித்த துணை ஆணையர் சர்வேஷையும் பாராட்டியுள்ளார்.