சீன விண்வெளி நிலையம் ஓரிரு நாளில் பூமியில் வந்து விழப் போகுது! – AanthaiReporter.Com

சீன விண்வெளி நிலையம் ஓரிரு நாளில் பூமியில் வந்து விழப் போகுது!

உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நாடும் தங்களுடைய+ தொழில் நுட்ப வசதிகளை மேம் படுத்தவும், தங்களுடைய நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் பல ஆராய்ச்சிகளுக்காக ஒவ்வொரு வருடமும் பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய வண்ணம் உள்ளனர். அப்படி அனுப்பப்படும் செயற்கை கோள்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரைதான் செயல்படும். அப்படி செயல்பாடு முடிந்த உடனே SPACE RUBBISH என அழைக்கப்படும் குப்பையாக மாறி அந்த செயற்கைகோள் எந்த சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டதோ அந்த சுற்று வட்ட பாதையிலேயே தொடர்ந்து பூமியை சுற்றி வர ஆரம்பிக்கும்.

இப்படி இந்த குப்பைகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து 2017 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 21,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களும் அதனுடைய பாகங்களும் அதிகமான வேகத்தில் பூமியை சுற்றி வருவதாக கணக்கிப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதன் அளவு பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விண்வெளி பயணங்களுக்கும், விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளுக்கு மிகப்பெரிய தடையாக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்த விண்வெளி குப்பைகளை அப்புறப்படுத்த எந்த ஒரு செயல்படுத்தக் கூடிய வழிமுறைகளும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும் சூழலில். சீன  விண்வெளி  நிலையம்  ஓரிரு நாளில் பூமியில் விழும் என்ற தகவல் வந்துள்ளது.

ஹைடெக்காகி விட்ட இந்த விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டி வந்த நாடு சீனா. தங்களுக்கென்ற தனி விண்வெளி நிலையத்தை அமைக்க முனைப்புடன் செயல்பட்ட அந்நாடு, செப்டம்பர் 26, 2011 ல் தியான்குங்-1 என்ற விண்வெளி நிலையத்தை நிறுவியது. தியான்குங்-1, 8.5 டன் எடையும் 40 அடி நீளமும் கொண்டது. தியான்குங் என்பதற்குச் ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று பொருள். 2012, 2013-ம் ஆண்டுகளில் மூன்று விண்வெளி வீரர்கள் தியான்குங்-1 விண்வெளி நிலையத்திற்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதற்குப் பின்பு மார்ச் 21, 2016-ல் தியான்குங்-1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. பல்வேறு  முயற்சி செய்தும் அதனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தது சீனா. தொடர்பை இழந்த  காரணம்  கூட இன்று வரை தெரியவில்லை. அதே சமயம் தியான்குங்-1 விண்வெளி நிலையம் தனது சுற்றுவட்ட பாதையிலிருந்து கீழே இறங்கத் தொடங்கியது.

நிராதராவாகிப் போன தியான்குங்-1 விண்வெளி நிலையம் சராசரியாக ஒவ்வொரு 88 நிமிடங்க ளுக்கும் 134 மைல்கள் தன்னுடைய உயரத்திலிருந்து கீழிறங்கி வர ஆரம்பித்தது. 2016-ம் ஆண்டு மார்ச்சில் 346 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த இதன் உயரம் மிகவும் குறைந்துவிட்டது. அதன்படி இன்றைய மார்ச் 30-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 2 ம் தேதிக்குள் பூமியின் வளிமண்டலத்திற்கு நுழையும் என எதிர் பார்க்கப்படுகிறது. தியான்குங்-1 விண்வெளி நிலையத்தின் எடை 8.5 டன்னாக இருந்தாலும் புவியின் வளிமண்டலத்திற்குள் வேகத்துடன் நுழையும்போது உருவாகும் வெப்பத்தால் அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். சிறு சிறு பாகங்களே தரையில் விழுந்தாலும் பெரிதாக பாதிப்புகள் இருக்காது என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. ஆனாலும்  இதிலிருக்கும் Hydrazine என்ற எரிபொருளால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது .

இதனிடையே தியான்குங்-1-ன் இழப்பைச் சரிக்கட்டும் வகையில் 2022-க்குள் தியான்குங்-2 விண்வெளி நிலையத்தை அமைக்கவும் ஆரம்பித்துள்ளதும் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தை தாண்டி வருகின்ற வேளையில், இந்த விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் கழன்று எரிந்து சம்பலாகி போய்விடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கயூட்டுவது போலவே நடந்தால் சரிதான்.