உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்தது சீனா! – AanthaiReporter.Com

உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்தது சீனா!

நிலவின் மறுபக்கத்தை பார்க்க முடிந்ததே தவிர யாரும் அங்கு சென்று அடையாத நிலையில் உலக வரலாற்றில் முதல்முறையாக நிலவின் இருண்ட பக்கத்தில் விண்கலத்தை தரையிறக்கி சீனா புதிய சாதனை படைத்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூமிக்கு நெருக்கமாக உள்ள சந்திரனில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய பல நாடுகள் தங்கள் செயற்கைகோள், விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம் நிலவும் பூமியும் ஒரே சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதால் நிலவின் மறுபக்கம் இதுவரையில் காணப்படாத இருண்ட பகுதியாக இருந்தது. அதனால் பூமியில் இருந்து பார்க்கமுடியாத, நிலவின் மற்றொரு பக்கம் குறித்து இதுவரை எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அந்நிலவின் அந்த மர்மமான மறுப்பக்கம் குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப் படாததால் அதை நிலவின் இருண்ட பக்கம் (Dark side of the moon) என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

இந்நிலையில் நிலவின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்வதற்காக சாங்-4 என்ற விண்கலத்தை டிசம்பர் 8ம் தேதி சீனா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவின் இருண்ட பக்கத்தில் தரையிறங்கியது. சாங் -4 விண்கலம் நேற்று காலை 10.26 மணிக்கு நிலவின் இருண்ட பக்கத்தில் உள்ள வான் கார்மன் என்ற பள்ளத்தில் தரையிரங்கியதாக சீனா தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்தது.

மேலும் தான் தரையிறங்கிய இடத்தை சாங் – 4 விண்கலம் படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த படத்தை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. இனி நிலவின் மர்மமான மறுபக்கம் தொடர்பான பல தகவல்களை இந்த விண்கலம் கண்டறியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பியதன் மூலம் சீனா உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. பூமியின் விண்வெளி போட்டியில் தனி முத்திரை பதித்துள்ளதக்கும்.