இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு! – AanthaiReporter.Com

இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு!

உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பெண் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் இந்த பிரச்னையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வந்த தாம்சன் ராயிட்டர்சின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கிளப்பிய அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. வேறு சில நிகழ்வுகளால், பரபரப்புகளால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அந்த கருத்துக் கணிப்பு பற்றிய விவாதங்கள் எங்காவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த கருத்துக் கணிப்புக்கு இந்தியாவின் முதல் எதிர்வினை, மறுப்புதான். முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் பிரச்சினை என்று பல சாக்கு போக்குகளை இந்திய அரசும் அதன் பிரதிநிதிகளும் சொல்லி வந்ததை ஊடகங்களில் பார்த்தோம். இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணை வேறு எப்படியாவது அவமானப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை. பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினையில்லை. பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கு சூழலில் இணையத்தளங்களில் வெளியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் காணொளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

அவை குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை. இந்நிலையில், IWF அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச காணொளிகளின் 78 ஆயிரம் URL இருந்ததாகவும் அது தற்சமயம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அடங்கிய காணொளிகள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுபற்றி IWF அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளதாவது,

குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக மாறி வருகின்றனர். அவர்கள் ஆபாசப் படங்களை பதிவு செய்வதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். அவை தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. ஆனால், அவர்கள் மாட்டிக் கொள்ளாதபடி காணொளிகளை பதிவு செய்கின்றனர். அவற்றை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இருப்பினும், சில இணையத்தளங்களை நீக்குவது கடினமாக உள்ளது. இதில் ஐரோப்பா முதல் இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

IWF அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அவற்றிலிருந்து சிறுவர்களைக் காப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக மாறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.