கவர்னரம்மா போற போக்கே சரியில்லை!- நாராயணசாமி அப்செட் – AanthaiReporter.Com

கவர்னரம்மா போற போக்கே சரியில்லை!- நாராயணசாமி அப்செட்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசினார். இதில் செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், முதலமைச்சர் நாராயணசாமி பதிலளித்தார்.

டில்லியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகையிலேயே தர்ணா நடத்தி வருகிறார். நீங்கள் ஆளுநருக்கு எதிராக எப்போது போராட போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாராயணசாமி,”நாங்கள் நாகரிகம் கருதி சட்டத்தின்படி செயல்படுகிறோம். அந்த நிலைக்கு செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்று கடுமையாக கூறினார்.

புதுச்சேரி பட்ஜெட் குறித்து பேசிய அவர்,”புதுச்சேரி பட்ஜெட் தொடர்பான கோப்பில் உள்துறை செயலாளர் கையெழுத்திட்டுவிட்டார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்குவார்” என்று தெரிவித்தார்.

மேலும்,”சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே மாதிரியான வழக்கில் 2 விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுவைக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்பது போல் உள்ளது. இதனால் நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைகிறது. நீதிமன்றங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகி விடக்கூடாது” என்று நாராயணசாமி கூறினார்.

”டில்லியில் ஆளுநருக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலத்தில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருப்பதால் அந்த அரசை முடக்கும் வேலையை செய்து வருகிறது. புதுவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற காலதாமதம் செய்வது, கோப்புகளை டில்லிக்கு அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவற்றை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார்” என்று சாடினார்.

மேலும்,”சமூக வலைதளங்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை கவர்னர் மிரட்டி வருகிறார். தொடர்ந்து அவர் விதிமுறையை மீறி செயல்படுகிறார். இதுதொடர்பாக புகார் தெரிவித்து கடிதம் எழுதியபோதிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதை சமாளித்துத்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்” என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.