அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – அரசு பஸ் + கார் சிக்கியதில் பரபரப்பு

அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – அரசு பஸ் + கார் சிக்கியதில் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் ஒன்றும் கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன.அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே சர்ச் பார்க் பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

bus apr 9

அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த 25ஜி மாநகரப் பேருந்தும் – ஹோண்டா சிட்டி காரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன.பள்ளத்தில் பஸ் இறங்கியபோது அதன் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். பஸ் பள்ளத்தில் இறங்கிய வேகத்தில் இருக்கையில் இருந்த பயணிகளின் தலை முன்சீட்டில் இடித்தது. இதில் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிலர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் பஸ்சுக்குள் இருந்த பயணிகளை மீட்டனர். காருக்குள் சிக்கிக் கொண்டவரும் மீட்கப்பட்டார். அவரது பெயர் பிரதீப் என்றும் அவர் மருத்துவர் என்றும் தெரியவந்துள்ளது.

அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கம் அமைப்பதற்காக பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி கீழே உள்ள மண்ணை அப்புறப்படுத்தும் போது, மேலே உள்ள மண் நெகிழ்ந்து விடுகிறது. இதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.பள்ளம் ஏற்பட்ட பகுதியில் துணியைக் கட்டி போலீசார் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.பள்ளத்தில் சிக்கிய பஸ், காரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிதிஅமைச்சர் டி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்தார்.மீட்பு பணிகளை உடனடியாக முடுக்கி விட்டார். சம்பவ இடத்திற்கு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்களும், வருவாய்த்துறையினர், போக்குவரத்து துறையினர், மெட்ரோ வாட்டர் துறையினர் வந்தனர். மாலை 4 மணியளவில் பள்ளத்தில் விழுந்த காரை முதலில் மீட்டனர்.பின்பு, மாநகரப் பேருந்து மீட்கப்பட்டது.

நிதிஅமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விபத்து குறித்து பேசும் போது: “மெட்ரோ ரயில் பணிக்கான வேலைகள் நடைபெறும்போது, பூமிக்கடியில் மண் நெகிழ்வு ஏற்பட்டு இது மாதிரி பள்ளம் ஏற்படுவது சகஜம்.வருங்காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் கவனமாக பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த எதிர்பாராத விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.தேவையான டெக்னாலஜியை பயன்படுத்தி பணிகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.நிதியமைச்சர் பேட்டியின்போது அமைச்சர் எம்.சி. சம்பத் உடனிருந்தார்.

error: Content is protected !!