ஐ.பி.எல். சாம்பியன் கோப்பை எனக்குத்தான் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் அசத்தல்

ஐ.பி.எல். சாம்பியன் கோப்பை  எனக்குத்தான் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் அசத்தல்

2018 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 181 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியடைந்தது. இந்த ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ20 கோடி முதல் பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ12.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 3ம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 4ம் இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா ரூ6.4 கோடி வழங்கப்பட்டது.

நேற்றைய இறுதி ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 47, யூசப் பதான் 45, ஷிகர் தவான் 26 ரன்கள் எடுத்தனர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஷேன் வாட்சன் மற்றும் டூப்லஸிஸ் ஆகியோர் இணைந்து ஆட்டத்தை துவங்கினர். புவனேஷ்குமாரின் முதல் ஓவரில் திணறிய வாட்சன், ஒரு பந்தை கூட அடிக்காமல் மெய்டனாக்கினார். துவக்கம் சென்னை அணிக்கு மோசமாக இருந்தது 4 ஓவருக்கு 14 ரன்கள் என்ற நிலையில் டூப்லஸிஸ் ஆட்டமிழந்தார்.

பின்னர் வாட்சனுக்கு ஜோடியாக சுரேஷ் ரெய்னா களத்தில் இறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்தது. 133 ரன்கள் என்ற நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார். இதனையடுத்து அம்பதி ராயுடு, வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை வெற்றிபெறச் செய்தனர். 181 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி, சன்ரைசர்ஸ் அணியை வென்றது. 117 ரன்கள் குவித்த வாட்சனுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது.

இதையடுத்து வெற்றிக் கோப்பையுடன் இருந்த கேப்டன் தோனியிடம், “சென்னை அணியில் 9 வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், “நாம் வயது பற்றியே அதிகம் பேசுகிறோம். ஆனால், அதைவிடவும் முக்கியம் ஒரு வீரரின் ஃபிட்னஸ்தான். அந்தக் கோணத்தில்தான் ஒரு வீரரை அணுக வேண்டும். ராயுடுவுக்கு வயது 33. ஆனால், களத்தில் அதனால் எந்த சிக்கலும் இல்லை. அவரால் சிறப்பாக ஃபீல்டிங் செய்யமுடியும். எனவே, வயதைவிடவும் ஃபிட்னஸ்தான் மிகவும் முக்கியம். களத்தில் மிகச்சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் விரும்புவார்கள். எனவே, ஒரு வீரர் எந்த வருடம் பிறந்தார், அவருக்கு 19 வயதா, 20 வயதா என்றெல்லாம் யோசிக்கவேண்டியதில்லை.

அதே சமயம், இந்த விஷயத்தால் எங்கள் அணிக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும் நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். வாட்சன் போன்ற மூத்த வீரர்கள் ஃபீல்டிங் செய்யும்போது, ஒரு ரன்னைத் தடுப்பதற்காக டைவ் அடிக்க வேண்டி யதிருந்தால், அதைத் தவிர்க்கச் சொல்லிவிடுவோம். காரணம், அதன்மூலம் அவருக்கு காயம்கூட ஏற்படலாம். பிராவோ, வாட்சன் போன்ற முக்கியமான பேட்ஸ்மேன்கள் காயத்தில் சிக்கிக்கொண்டால், அவர்களுக்கு மாற்றான காம்பினேஷனை மீண்டும் உருவாக்குவது கடினம். எனவே, Age is just a number-தான். நாம் ஃபிட்டாக இருக்கவேண்டியதுதான் மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய 4 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லீக் சுற்றில் நடந்த 2 போட்டியிலும், குவாலிபயர்-1 மற்றும் பைனலிலும் சன்ரைசர்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அது போல் ஐபிஎல் 11வது சீசனில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை, சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றார். அவர் 17 போட்டியில் 735 ரன் (அதிகம் 84, சராசரி 52.50, அரைசதம் 8) குவித்து முதலிடம் பிடித்தார். ரிஷப் பன்ட் (684, டிடி), கே.எல்.ராகுல் (659, கிங்ஸ் லெவன்) அடுத்த இடங்களை பிடித்தனர். விக்கெட் வேட்டைக்கான ஊதா தொப்பி, பஞ்சாப் அணி வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை (24 விக்கெட்) வசமானது. சன்ரைசர்ஸ் பவுலர்கள் ரஷித் கான், சித்தார்த் கவுல் தலா 21 விக்கெட் கைப்பற்றி அடுத்த இடங்களை பிடித்தனர்.

error: Content is protected !!