ஓ.எம்.ஆரில் ஐடி நிறுவனங்கள் மூடும் அவலம்!அப்பார்ட்மெண்ட்கள் காலியாகும் அபாயம்! – AanthaiReporter.Com

ஓ.எம்.ஆரில் ஐடி நிறுவனங்கள் மூடும் அவலம்!அப்பார்ட்மெண்ட்கள் காலியாகும் அபாயம்!

ஒ.எம்.ஆர் என்பது ஓல்டு மாமல்லபுரம் சாலை என்றாலும் இன்றது சென்னையின் நவீன அடை யாளங்களுள் ஒன்று. பூஞ்சேரி கூட்டு ரோட்டில் தொடங்கி மத்திய கைலாஷ் வரை நீண்ட நெடிய சாலையாக இருக்கும் இது , சில வருடங்களுக்கு முன் வரை சதுப்பு நிலகாடுகளாகவும், விவசாய நிலம் நிறைந்த பகுதி களாகவும் அறியப்பட்ட இந்த சாலை இன்று வான் உயர் கட்டிடங்கள், வழுக்கும் சாலை பறக்கும் சொகுசு கார்கள், பன்னாட்டு உணவு விடுதி, பன்னாட்டு திரை அரங்குகள் என அரக்க பரக்க இயங்கிகொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த சாலையில் அதாவது ஒ.எம்.ஆரில் சுமார் 360 தனியார் அப்பார்ட் மெண்ட்கள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி உள்ளனர். குறைந்த பட்சம் 3 அடுக்கு மாடியிலிருந்து அதிகபட்சமாக 50 அடுக்கு மாடிகள் வரை உள்ள இந்த அப்பார்ட்மெண்ட்கள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளில் இருந்து சுமார் 3500 வீடுகள் வரை உள்ளன. சினிமா மால் , ஷாப்பிங்மால் , ஸ்விம்மிங் புல், என ஸ்டார் ஹோட்டல் தரத்தில் ஒரு குட்டி ஹைடெக்சிட்டிக்கு ஈடாக இருக்கிறது இந்த அப்பார்ட்மெண்ட்கள். சராசரியாக ஒரு அப்பார்ட்மெண்ட்க்கு ஆயிரம்பேர் வசிப்பதாக கணக்கிட்டாலும் முந்நூற்று அறுபது அப்பார்ட்மெண்ட்களுக்கு முன்று லட்சத்து அறுபது ஆயிரம் பேர் ஆகிறது.

மேலும் இச்சாலையில் டிசிஎஸ், சிடிஎஸ் , காக்னிசென்ட் என கிட்டதட்ட 82 க்கும் மேற்ப்பட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளன , சிறுசேரி சிப்காட்டில் மட்டும் 31 ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் டிசிஎஸ் எனும் தனியார் ஐடி நிறுவனத்தில் மட்டும் 36 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இச்சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகம். ஆக மொத்தம் இந்த ஓல்டு மாமல்லபுரம் சாலையில் மட்டும் கடந்த 2005 ஆண்டுவாக்கில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் புதியதாக குடியேறி உள்ளனர். இவர்கள் தினசரி குளிப்பது முதற்கொண்டு குடிப்பதுவரைக்குமான தண்ணீர் வசதி வெளியிலிருந்தே பெறப்படுகிறது.

ஒ.எம்.ஆரை ஒட்டியுள்ள அருகில் உள்ள தாழம்பூர் , சிறுசேரி , பொன்மார், புதுப்பாக்கம், மாம் பாக்கம், காயார், பனங்காட்டுபாக்கம் வெண்பேடு, இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், பையனூர் , திருப்போரூர், கன்னகப்பட்டு, காலவாக்கம், தையூர் உள்ளிட்ட சுமார் 22 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துவரப்படுகிறது. இப்படி குடிநீர் சப்ளை செய்யும் லாரிகள் ஒவ்வொன்றும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் இருந்து 32 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாக உள்ளது

சராசரியாக 20 ஆயிரம் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி நாள் ஒன்றுக்கு ஒரு கிணற்றி லிருந்து 10 லோடுகள் சப்ளை செய்தாலும் ஒரு கிணற்றிலிருந்து ஒரு லாரிமூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் 346 கிணறு களில் நாள் ஒன்றுக்கு என்றாலும் கூட 6 கோடியே 92லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கே கிட்ட தட்ட 7 கோடி லிட்டர் என்றால் ஒரு மாதத்திற்கு மட்டும் 210கோடி லிட்டர் உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் எளிதாக சொல்வதாக இருந்தால் ஒரு மாதத்திற்கு மட்டும் சராசரியாக ஒரு ஏரி தண்ணீர் காலி ஆகிறது. அதாவது 800 ஏக்கரில் இருந்து 1500 ஏக்கர் வரை விவசாயம் செய்ய பயன்படுத்தபடும் பாசன நீர் செலவாகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் இந்த வாட்டர் பிஸ்னஸால் ஒ.எம்.ஆர் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு விரைவாக குறைந்து வருவதால் கடல்நீர் உயர்ந்து கிராமங்களுக்குள் ஊடுவுருவி வருகிறது.

பாசனநீரை விற்பனைசெய்யும் விவசாயிகளை குறைசொல்லியும் பயனில்லை,

ஏனென்றால் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்கு ஒரு விவசாயி சுமார் 12 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரத்திற்கு செலவு செய்கிறார். அவருக்கு சுமார் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இதற்கு தான் மட்டுமில்லாது தனது மனைவி குழந்தை, குட்டி, மாடு, கண்ணு என எல்லோருமே உழைக்கவேண்டும்.

மேலும் நாற்றுநட, களைப்பறிக்க, அறுவடைசெய்ய, ஆட்கள் கிடைப்பதில்லை, மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் நாற்று நடவும் ,களை பறிக்கவும், அறுவடை செய்யவும் முயன்றாலும் அதிக பணம் கொடுக்கவேண்டி இருக்கிறது. அப்படியே கொடுத்தாலும் சரியான நேரத்தில் இயந்திரங்கள் கிடைப்பதில்லை,

கடைசியில் பண நஷ்டமும் மன உளைச்சலுமே விவசாயிக்கு மிஞ்சுகிறது இதனால் விவசாயம் செய்வதை விட்டு தண்ணீரை விற்கும் நெருக்கடிக்கு ஆளாகிறான் விவசாயி.

ஒரு நடைக்கு 200 ரூபாய் கிடைக்கிறது, சராசரியாக 10 நடை போனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் என மாதத்திற்கு 60 ஆயிரம் கிடைக்கிறது. கிட்டதட்ட 4 அல்லது 5 மாதங்கள் உழைத்து பயிர் வைத்தால் ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைத்த நிலையில் எந்த உழைப்பும் இன்றி வெறும் தண்ணீர் விற்பதால் மட்டும் ஒரு மாதத்தில் 60 ஆயிரம் லாபம் பார்க்கிறான்.

இந்த நிலை நீடித்தால் இந்த ஆண்டே பழைய மாமல்லபுரம் சாலையை சுற்றியுள்ள 300க்கும் மேற் பட்ட விவசாய கிராமங்கள் வறட்சியையும் கடும் தண்ணீர் பஞ்சத்தையும் சந்திக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் விளைநிலங்கள் – குடியிருப்புகள் அத்தனையும் உப்புமண் ஆகி மண் மலடு தட்டி போகும் பெரும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக உள்ளுர் கிராம மக்கள் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் வீதிக்கு வந்து போராடும் சிக்கலும் உள்ளது. உள்ளூர்வாசிக்கே தண்ணீர் இல்லாதபோது இவர்களுக்கு எங்கே போவது ?
அதனால் தண்ணீர் தட்டுபாடு காரணமாக ஐடி நிறுவனங்கள் மூடவேண்டி வரலாம், அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம்.

இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீராதார கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் பாசன நீர் விற்பனையை கட்டுப்படுத்துதல் கிராமங்கள் தோறும் நீர் ஆதாரங்களை பெருக்குதல் போன்ற முன்முயற்சிகளை செய்தாக வேண்டும்.

அதிலும் குறிப்பாக நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் ஐடி நிறுவனங்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மட்டுமல்லாது தண்ணீர் தேவைப்படுகின்ற சுற்றுவட்டார கிராமங்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திட அரசாங்கம் முன்வரவேண்டும், இதுதான் ஒ எம்ஆரை சூழ்ந்துள்ள அபாயத்தை தடுக்கும் உடனடி தீர்வாக அமையும்.

(குறிப்பு – ஊடகங்கள் விவாதிக்க வேண்டிய ஒன்று)

Samaran Nagan