சிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்!- டிஜிபி தகவல்!!

சிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்!- டிஜிபி தகவல்!!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிதாக 60 அதிகாரிகளை நியமிக்கக் கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ள நிலையில் பொன்.மாணிக்கவேல் மீது ஒரு புகார் மனு வந்திருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதாவது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டது முதல் இதுவரை 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று பொன் மாணிக்கவேல் பணி ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில் இந்த சிலை திருட்டு விவகாரங்களை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு போட்ட அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், தற்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 14 உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 காவல் அதிகாரிகளை நியமிக்குமாறு உள்துறை செயலாளருக்கு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஏற்கெனவே பணிபுரிந்த 60 அதிகாரிகள் அயல்பணிகளில் இருந்ததால் அவர்கள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலயில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில், ‘சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதில், சிலை கடத்தல் வழக்கில் உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தப்படுகிறது.

இந்த வற்புறுத்தலை மீறும் அதிகாரிகளை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் திட்டியும், மிரட்டியும் வருகிறார் என அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பிரிவில் இருந்து அவர்கள் பணிமாறுதல் கேட்டு உள்ளனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை மேற்கொள்ளப்படும்’ என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!