சென்னை நகரில் சிவப்பு வண்ணத்தில் புதிய பேருந்துகள்! – AanthaiReporter.Com

சென்னை நகரில் சிவப்பு வண்ணத்தில் புதிய பேருந்துகள்!

இது வரை பச்சை வண்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை நகர பேருந்துகள் இனி சிவப்பு வண்ணத்தில் புதிய பேருந்துகள் பொங்கல் முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 3,300 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பல பேருந்துகள் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் ஓடுகிறது. இவற்றுக்குப் பதில் புதிதாக சொகுசு பேருந்துகள் விட போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தாழ்தள படிக்கட்டுகள், தானாகவே மூடித் திறக்கும் கதவுகள், இருவர் அமரக் கூடிய இருக்கைகள் இடம் பெற்றுள்ளது. இந்த பேருந்துகள் கரூர், பொள்ளாச்சியில் உள்ள பேருந்து பாடி கட்டும் தொழிற்சாலையில் தயாராகி வருகிறது. புதிதாக தயாரான சொகுசு பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மொத்தம் 250 பேருந்துகள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதில் புதிய பேருந்துகள் விடப்படுகிறது. புதிதாக விடப்படும் பேருந்துகள் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இதன் மூலம் மாநகர பேருந்துகளின் நிறம் மாறுகிறது. இந்த புதிய பேருந்துகள் பொங்கல் முதல் சென்னை நகரில் ஓடும் என்றும் முதலில் 250 பேருந்துகள் இயக்கப்படும். அதன்பிறகு படிப்படியாக 986 புதிய பேருந்துகள் விட திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஓடுகின்றன. சென்னையில் மட்டுமே தனியார் பேருந்துக்கு அனுமதி இல்லை. இதனால் பயணிகள் போக்குவரத்தில் அரசு பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கிறது.