சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு! – AanthaiReporter.Com

சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!

42-வது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார்.

சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 42-வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.

இந்த கண்காட்சியை பபாசி புரவலரும், தொழிலதிபருமான நல்லி குப்புச்சாமி செட்டி தலைமை யில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து விருதுகளை வழங்கி பேசினார். தமிழ்நாடு அறிவு சார் மாநிலம் என்பதை இங்குள்ள நூல்கள் பறை சாற்றுவதாகத் தெரிவித்தார். நூல்கள் வாசிக்கும் பழக்கத்தைப் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டுமென்றும், இந்த ஆண்டு 17 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வரப்பிரசாதம் என்றும் எடப்பாடி பழனிசாமி தன் பேச்சில் குறிப்பிட்டார்.

பதிப்பக செம்மல் கணபதி விருது, முல்லை பழனியப்பனுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது திலகவதி ஐபிஎஸ், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான விருது காயத்ரி பிரபுவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருதை கோவி.பழனி பெற்றார். சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழ் அறிஞருக்கான விருது அண்மையில் மறைந்த க.ப.அறவாணனுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த விற்பனையாளருக்கான விருது ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த நூலகருக்கான விருது சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமாருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், பபாசி தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சி வார நாட்களில் தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நுழைவுக்கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் நுழைவுச்சீட்டைப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நாட்களும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட 100 ரூபாய் கொண்ட நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.