சார்லி சாப்ளின் 2 – திரை விமர்சனம்!

சார்லி சாப்ளின் 2 – திரை விமர்சனம்!

உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து விட்டது செல்போன். அதே சமயம் அதில் உள்ள வாட்ஸ் அப் என்னும் தண்ணி இல்லாத  கிணற்றுக்குள் விழுந்து  நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்பவர் கள் அதிகாம்கி விட்டதும் அப்படியான பலருக்கு அந்த வாட்ஸ் அப்-பே பெரிய ஆப்பாக திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரியுமா?ஆம்… இந்த வாட்ஸ் அப் பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவது, திருமண பந்தங்கள் விலகுவது,, விவாகரத்தும் அதிகமாக நடக்கிறது என்றும் பல்வேறு உறுதிப்படுத்தப் பட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் அதிகமான விவாகரத்து வழக்கு களில்  மிக முக்கிய வில்லன் இந்த ‘வாட்ஸ் அப்’ குறுஞ்செய்திகள்தான் என்பதும் உண்மையாக்கும் . இப்போதெல்லாம் இந்த ஓசி என்ற பெயரில் அதிகமாகப்  புழங்கும் வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமின்றி ஆபாச வசவுகள் மற்றும்  பலான படங்கள் அனுப்புவதும் கூட இப்போது சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் அதன் சீரியஸ்னெஸ் குறித்து கொஞ்சம் காமெடியாக சொல்ல வந்திருப்பதுதான் ‘ சார்லி சாப்ளின் 2’ .  பிரபு, பிரபு தேவா, நிக்கி கல்ராணி யுடன் ஒரு ஆப்பிள் போனும் நடித்து மேற்படி உண்மையை உணர்த்த முயன்றுள்ளதுதான் ஹை லைட்., (டைட்டில் கார்ட்டிலேயே போனுக்கு கிரெடிட் கொடுத்திருக்கிறார்கள்)

நவீன மேரேஜ் புரோக்கராக – அதாங்க மேட்ரிமோனியல் சர்வீஸ் நடத்தும் ஹீரோ திரு (பிரபு தேவா), டாக்டரான ராமகிருஷ்ணன் (பிரபு)வின் மகள் சாரா (நிக்கி கல்ராணி)யை கண்டதும் காதல் கொள்கிறார். அக்காதல் ஆரம்பத்தில் அப்படி இப்படி எப்படியோ ஆகி, ஒரு கட்டத்தில் நிக்கியும் அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிப்பதோடு, திருமணமும் நிச்சயம் செய்து விடுகிறார்கள்.

இந்த திருமணத்திற்கு முதல் நாள் வழக்கப்படி நண்பர்களுக்கு பிரபு தேவா பார்ட்டி கொடுக்க, அங்கு அவரது நண்பர் ஒரு வீடியோ வைக்காட்டுகிறார். அதில் நிக்கி கல்ராணி வேறு ஒரு ஆணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கிறார். அதை ஒரு பலான வெப்சைட்டில் பார்த்தேன் என்று வேறு சொல்கிறார். அதனால் ஆத்திரமான பிரபு தேவா அவரது நண்பர் தூண்டுதலால், நிக்கி கல்ராணி மற்றும் அவரது குடும்பத்தை கன்னாபின்னாவென்று திட்டி வீடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி  விடுகிறார் .

பிறகு, அந்த வீடியோவில் நிக்கிக்கு உம்மா கொடுத்த நபரை நேரில் தேடிப் பிடித்து உதைத்து விசாரிக்கிறார் பிரபு தேவா, அப்போது தன் உயிரை காப்பாற்றுவதற்காக தான் நிக்கி கல்ராணி அப்படி செய்தார் என்ற உண்மையை கேட்டு அதிர்ந்து போகிறார். அதே சமயம், பிரபு தேவா அனுப்பிய அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்க்கவில்லை என்பதை தெரிந்துக் கொள்ளும் பிரபு தேவா, அவர் பார்ப்பதற்கு முன்பாகவே அவரது செல்போனில் இருந்து டெலிட் செய்துவிட நினைத்து கிளம்ப, அது நடந்ததா அல்லது அந்த வீடியோவால் நடக்க இருந்த பிரபு தேவாவின் திருமணம் நின்று போனதா, என்ற எதிர்ப்பார்ப்புக்கிடையே, கல்யாண வீட்டில் பிரபு தேவாவுக்கு புதிய சிக்கல் ஒன்று வருகிறது. அதையெல்லாம் சமாளித்து தாலி கட்டிய பின்னாலும் வாட்ஸ் அப் சாத்தான்  போட்ட வெடிகுண்டின்  போக்கை மேலோட்டமாக சொல்வதே ’சார்லி சாப்ளின் 2’ படத்தின் திரைக் கதை.

இப்படி ஒரு வாட்ஸ் அப் விஷ(ய)த்தை சொல்ல கொஞ்சம் காமெடி(?), நிறைய கவர்ச்சி, ரெண்டு ஆக்ஷன் ஃபைட் என்ற கோலிவுட், டோலிவுட்-டுக்கே உரிய காரம், மசாலா கலந்த  கலவையை போட்டு ஒரு ஃபுல் தம் பிரியாணி ரெடி பண்ணிய இயக்குநர் இன்னும் கொஞ்சம் திரைக்கதைக்காக மெனக்கெட்டிருக்கலாம்.. ஆனாலும் கைவசம் கிடைத்த ஒரெயொரு ஜோக்கர் சீட்டு மாதிரியான ‘சின்ன மச்சான்’ பாடல் எப்போ வரும் என்று இரண்டு மணி நேரம் ஏக்கத்த்கோடு பார்க்க வைத்ததில் யூனிட் ஜெயித்து விட்டது.

மொத்தத்தில் இது சிரிப்பு படம் என்றெல்லாம் நினைத்து போக வேண்டாம். அதே சமயம் சீரியஸான ஒரு மெசெஜை சொல்லும் படம் என்ற வகையில் சார்லி சாப்ளின் 2 தனி கவனம் பெறுகிறது.

மார்க் 3 / 5

error: Content is protected !!