சந்திரயான் -2 ஏவும் பணி தொழிநுட்ப பிரச்னையால் தற்காலிகமாக நிறுத்தம்! – AanthaiReporter.Com

சந்திரயான் -2 ஏவும் பணி தொழிநுட்ப பிரச்னையால் தற்காலிகமாக நிறுத்தம்!

சர்வதேச நாடுகளிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் 2 கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாகவும், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மிக முக்கியமான மைல்கல் என்று கூறப்படும் சந்திரயான் 2, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க தயாரான உலகின் முதல் விண்கலம் இது. இந்த சந்திராயன் 2 செயற்கைக்கோள் இந்திய தொழில் நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். நிலவில் மெதுவாக தரையிறங்கப் போகும் செயற்கைக்கோளை உருவாக்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையும் இந்த செயற்கைகோளால் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவில் மெதுவாக தரையிறகும் செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர்.

அப்படி நிலவின் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கும் முதல் இஸ்ரோவின் செயற்கைக்கோளான சந்திராயன் 2 செயற்கைகோளில் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோளை உருவாக்க சுமார் 960 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியாப்பட்ட சந்திரயான்-2 செயற்கை கோளை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட இருந்தது.இதற்கான கவுன்டவுன் நேற்று காலை முதல் துவங்கியது. ஆனால் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த சந்திரயான் -2 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

சிறு பிரச்னையால்தான் சந்திரயான் -2 தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்