‘சந்திரயான் – 2’ விண்கலம் செப்டம்பர் 7 ல் நிலவில் தரையிறங்கும்!

‘சந்திரயான் – 2’ விண்கலம் செப்டம்பர் 7 ல் நிலவில் தரையிறங்கும்!

செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்க உள்ளது என்று, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுவரைக்கும் இஸ்ரோ அனுப்பிய INSAT, GSAT, IRS, IRNSS செயற்கைக்கோள்கள் எல்லாமே விண்வெளித் தொழில்நுட்பத்தின் (Space Technology) வெளிப்பாடு. இவை ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் நமக்கு வெவ்வேறு விதங்களில் உதவுமே தவிர, புதிதாக எதுவும் செய்யாது. ஆனால், சந்திரயான் 1, மங்கள்யான் போன்ற இரண்டும் விண்வெளி அறிவியலுக்கா னவை (Space Science).

இதுதான் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகளை நமக்கு கொடுக்கும். எதிர்காலத்தில் விண்வெளிக்குச் சென்று வாழ வேண்டுமென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இவைதாம் நமக்குக் கற்றுக்கொடுக்கும். வேறு கோள்களிலிருந்து பூமிக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு வர வேண்டுமென்றால், அதற்கு இவைதாம் நமக்கு வழிகாட்டும்.

அப்படித்தான் சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்தது. மங்கள்யான், செவ்வா யின் குணங்களை நமக்கு படம்பிடித்துக்காட்டியது. இதன் அடுத்தகட்டம்தான் சந்திராயன் 2. நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்ததோடு சந்திரயான் தன் பயணத்தை முடித்துக்கொண்டது. ஆனால், அதைத் தாண்டியும் இன்னும் நாம் அங்கே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின் றனவா? தெரியாது. நிலவில் எங்கே நீர் அதிகம் இருக்கிறது? தெரியாது. நிலவிலிருக்கும் கால்சியம், மக்னீசியம், ஹீலியம் போன்ற தனிமங்களின் அளவு என்ன? தெரியாது. இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு விடைகாணவும் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 நிலவில் தரையிறங்க உள்ளது என்று டுவிட்டரில் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை சிறப்பாக பயணம் நடந்துகொண்டு உள்ளது. நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 தரையிறங்க உள்ளது. இது பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!